பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று அவர்கள் தனித்தனியே வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்:
பெட்ரோல், டீசல் மீதான விலை நிர்ணயக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சந்தை நிலவரத் துக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக் கும் அதிகாரம் எண்ணெய் நிறுவ னங்களுக்கு வழங்கப்பட்ட நாளிலிருந்தே, எரிபொருள் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் போய்விட்டது. ஒருபுறம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறும் மத்திய அரசு, மற்றொருபுறம் பணவீக்கத்தை அதிகரிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே செல்வது என்ன வகையான பொருளாதார உத்தி என்பது தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து ஏழைகள், நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். இந்த சாதாரண உண்மையை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
பெட்ரோல், டீசலுக்கான வரிகளை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தாலும் அதன் பயன் மக்களுக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை 5 முறை அதிகரித்து இருக்கிறது. உணவுப் பொருட்களின் விலை 3.88 விழுக்காடு அளவு உயர்ந்துள்ளநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் போய் மக்கள் அல்லல்படும் நிலைமை உருவாகும். எனவே, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியால் இருசக்கர வாகனங்கள், உயர் தொழில் பிரிவில் வாடகை வாகனங்கள் பெருகி வருவதை எண்ணெய் நிறுவனங்கள் தங்க முட்டை இடும் வாத்தாக கருதுகின் றன. இது சாமானிய மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் நலனுக்கு எதிரான பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் காலத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு மீண்டும் எடுத்துகொள்ள வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக குறைந்தபோதும், இந்தியாவில் விலையேற்றமே தொடர்கதையாகி வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்த சிறிதளவு விலைக் குறைப்பைகூட, கலால் வரியை உயர்த்துவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்திவந்தது. இது சங்கிலித்தொடர்போல் பிற பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமாக அமைந்திடும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.