தமிழகம்

சென்னை கோயம்பேடு - நேரு பூங்கா இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வெற்றிகரமாக இயக்கம்

செய்திப்பிரிவு

ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்

கோயம்பேடு - நேரு பூங்கா இடையே 8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் நேற்று வெற்றிகரமாக இயக்கப் பட்டது. ரயில் நிலையங்களில் காற்றோட்டம், வெளிச்சத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. வரும் ஜனவரியில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதில், 24 கி.மீ. தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப்பாதையில் ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது, விமான நிலையம் சின்னமலை கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில், தினமும் சுமார் 14 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

அடுத்தகட்டமாக கோயம் பேட்டில் இருந்து நேரு பூங்கா வரை யில் மொத்தம் 8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் களை இயக்க, கடந்த சில மாதங்க ளாக சோதனை ஓட்டம் நடத்தப் பட்டு வருகிறது. இதற்கிடையே, செய்தியாளர்களுக்கான சிறப்பு பயணத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை 3.14 மணிக்கு புறப்பட்ட மெட்ரோ ரயிலை எம்.கார்த்திகை செல்வன் என்பவர் ஓட்டிச் சென்றார். 6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சென்றது. சத்தம், அதிர்வுகள் இல்லாமல், சுரங்கத்தில் 30 முதல் 35 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில் சென்றது.

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் (சுரங்கம்), வி.கே.சிங் திட்ட இயக்குநர் திரிவேதி, தலைமை பொதுமேலாளர் (எலக்ட்ரிக்கல்) ராமசுப்பு ஆகியோர் இந்த ரயிலில் பத்திரிகையாளர்களுடன் பயணம் செய்தபடி மெட்ரோ ரயில் பாதைகள் பாதுகாப்பு, ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் டவர், ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா வரையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொதுமேலாளர் (சுரங்கம்) வி.கே.சிங் கூறியதாவது:

கோயம்பேடு - நேரு பூங்கா இடையே ரயில்பாதை மற்றும் ரயில் நிலையங்களில் இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு பாதுகாப்புடன் கூடிய, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் குளிர்பதன வசதி உள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 20 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேல் இருக்கும் முதல் தளத்தில் டிக்கெட் கவுன்ட்டர்களும், பய ணிகள் சேவை மற்றும் பாதுகாப்பு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. ரயில் பாதையில் ஒவ்வொரு 250 மீட்டர் தூரத்துக்கும் அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன.

அவசர காலத்தில் மக்கள் நடந்து செல்ல ரயில்பாதை அருகே நடைபாதையும் அமைக்கப்பட் டுள்ளது. ரயில் நிலையங்களின் உள்பகுதியில் காற்றோட்டத் துக்காக ஒவ்வொரு ரயில் நிலையத் திலும் 8 ராட்சத மின் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிச்சத்துக்கு போதிய அளவில் மின்விளக்கு அமைக்கப்பட்டி ருந்தாலும், சில இடங்களில் சூரிய வெளிச்சம் வரும் வசதியும் உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது. மேலும் யூபிஎஸ், ஜெனேட்டர் வசதி இருப்பதால் மின்தடை ஏற்பட வாய்ப்பே இல்லை. கனமழையின்போது ரயில் நிலையங்களின் உள்ளே மழைநீர் வருவதைத் தடுக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் கோயம்பேடு நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

5 இடங்களில் மாற்றுப் பாதை வசதி

அவசரகாலத்தில் மெட்ரோ ரயில்களை மாற்றுப் பாதை வழியாக இயக்க ஷெனாய் நகர், சென்ட்ரல், டிஎம்எஸ், சின்னமலை, விமான நிலையம் ஆகிய 5 இடங்களில் வசதி உள்ளது.

லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்றவற்றுக்கு வயர்லெஸ் நெட்வொர்க் இணைப்பு கிடைக்கக் கூடிய ‘வைஃபை’ வசதி கொண்டு வரப்படவுள்ளது.

வரும் ஆண்டுகளில் தேவையைக் கருத்தில் கொண்டு 6 பெட்டிகள் வரையில் மெட்ரோ ரயில்களை இயக்கும் வகையில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக நேரு பூங்காவில் இருந்து சென்டரலுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது நடந்து வரும் ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் பணிகளையும் வரும் 2018 மார்ச்சில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT