தமிழகம்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2-வது முறையாக அமைச்சரவை கூட்டம்: உதய் திட்டம், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை

செய்திப்பிரிவு

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 2-வது முறையாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் காவிரி நீர் விவகாரம், உதய் மின் திட்டம், புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர், நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்றும், அமைச்சரவை கூட்டங்களுக்கு அவரே தலைமை வகிப்பார் என்றும் முதல்வர் ஜெயலலிதா பணிக்குத் திரும்பும் வரை இந்த ஏற்பாடு இருக்கும் என்றும் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில், காவிரி நதிநீர் விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம், பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்ட சில திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.

இந்நிலையில், மத்திய எரிசக்தித் துறையின் உதய் திட்டத்தில் இணைய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இத்திட்டத்தில் இணைவது தொடர்பாக முக்கிய முடிவுகளை தமிழக அரசு எடுக்க வேண்டியிருந்தது.

மேலும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் தமிழகம் சார்பில் அமைச்சர் க.பாண்டியராஜன், பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா ஆகியோர் பங்கேற்கின்றனர். இது தொடர்பாகவும் விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதற்காக தமிழக அமைச்சரவை நேற்று 2-வது முறையாக கூட்டப்பட்டது. தலைமைச் செயலகத்தில் மாலை 5 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உட்பட 31 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

காவிரி நீர் விவகாரம், உதய் திட்டத்தில் இணைவது, புதிய கல்விக் கொள்கையில் எந்த நிலைப்பாடு எடுப்பது, அத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள், மீனவர்கள் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT