வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமாகி கடந்த 22-ம் தேதி ‘கியாந்த்’ புயலாக உருவானது. இது வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மறைந்தது. இதன்மூலம், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவானது.
இதை உணர்த்தும் வகையில்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலையில் சென்னை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது.
வடகிழக்கு பருவமழை தொடர் பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச் சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஈரப்பதம் நிறைந்த காற்று தென்னிந்திய பகுதியில் பரவியுள்ளதால் பரவலாக மழை பெய்துள்ளது. இதன்மூலம் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. பருவமழையை 3 மாதங்களுக்கு எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு சராசரியாக 44 செ.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கியுள்ள மிதமான மழை அடுத்த 48 மணி நேரத்துக்கு பெய்யும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் இயல்பான அளவை விட 53 சதவீதம் (67 செ.மீ.) அதிகமான மழையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது இயல்பான 44 செ.மீ. மழையை விட 23 செ.மீ. அதிகமாகும். சென்னையில் சராசரியாக 78 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 160 செ.மீ. மழை பெய்தது. இது 104 சதவீதம் அதிகமாகும்.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு நிலை
தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும், 50 முதல் 75 சதவீத பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், அதன்பின் அடுத்தடுத்த வங்கக்கடல் நிகழ்வுகள் அடிப்படையில் மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.