சென்னை: இலக்கியம் தாண்டி அனைத்து துறைகளிலும் தமிழ் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று புத்தக வெளியீட்டு விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பிராட்வேயில் உள்ள தனியார் பள்ளியில் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி டாக்டர் டில்லிபாபு ஆகியோர் இணைந்து எழுதிய ‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை' என்ற புத்தக வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.
நல்லகண்ணு வெளியிட்டார்
விழாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். விழாவில் புத்தகத்தை நல்லகண்ணு வெளியிட, விஞ்ஞானிகள் நம்பி நாராயணன், மயில்சாமி அண்ணாதுரை, டில்லிபாபு, சென்னை மாநகர காவல் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் நல்லகண்ணு பேசியதாவது:
இந்தியா இருண்ட நிலையில் இருந்து மேலும் வளர எதிர்காலத்துக்கு வழிகாட்டியாக திகழும் நூல் இது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த நூலை படிக்க வேண்டும்.
கரோனாவை பற்றி இந்த நூலில் தெளிவாக கூறியுள்ளனர். கரோனா காலத்தில் துக்கத்துக்கு கூட போக முடியாது நிலை இருந்தது. இறந்தவர்களின் உடலையாரும் தொட மாட்டார்கள் என்றகொடுமையான நிலை வந்திருக்கிறது. இந்த கொடுமை திரும்ப வரக்கூடாது.
கரோனா மட்டுமல்ல, எந்த நோயாக இருந்தாலும் உறவுகள் இல்லாமல் சாகும் நிலை உருவாககூடாது. உறவுகள் வளர வேண்டும்.குடும்பங்கள் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விரும்புவதை தேர்ந்தெடுங்கள்
விஞ்ஞானி நம்பி நாராயணன் பேசும்போது, “மாணவர்கள் என்னவாக விரும்புகிறீர்களோ, அதை தமிழில்தான் படிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தமிழ் மீது காட்ட வேண்டிய பற்று வேறு. தொழில்முறை எதிர்காலம் என்பது வேறு. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கல்வி கற்க வேண்டும். எதற்காகவும் மாணவர்கள் பயப்படக் கூடாது. மாணவர்கள் விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்’’ என்றார்.
விஞ்ஞானி டில்லிபாபு பேசும்போது, “1967-ம் ஆண்டு முதல் ஆங்கிலம் உலகில் அறிவியல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. உலக அளவில் விஞ்ஞானிகள் ஆங்கிலத்தில் எழுத தொடங்கினர். இதனால் தமிழ், ரஷ்யா உட்பட பல மொழிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. தமிழ் மொழியில் அறிவியல், தொழில்நுட்பம் என்ற சொற்கள் இணைய தேடலில் மிகமிக குறைவாக இருப்பதாக ஓர் ஆய்வில், தெரியவந்தது. அனைத்து துறைகளில் இருப்பவர்களும் தங்கள் துறைகள் சார்ந்து தமிழில் எழுத வேண்டும். அப்போதுதான் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும்’’ என்றார்.
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, ‘‘இளைஞர்கள் கடமை உணர்வுடன் இருக்க, பொறுப்பான வாழ்க்கை வாழ வேண்டும். இன்று இளைஞர்களுக்கு அதிக கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில விஷயங்கள் இளைஞர்களின் வாழ்க்கையை உயர்த்தும், சில விஷயங்கள் அவர்களை கீழ் நிலைக்கு அழைத்துச் செல்லும். அது எவை என்ற புரிதல் இருக்க வேண்டும். தமிழில் எழுதும்போது தமிழும்உயரும், தமிழனும் உயர்வான். இலக்கியம் தாண்டி அனைத்து துறைகளிலும் தமிழ் ஓங்கி ஒலிக்கவேண்டும். மாணவர்கள் தங்கள் இலக்கு என்ன என்பதை இயல்பாக கண்டுபிடிக்க முடியும். அதனுடன் சரியாகபயணிக்கும்போது இலக்கை நோக்கி பயணிக்க முடியும். அடுத்த தலைமுறைக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புத்தகம் படித்தால் மனதில் பொறிஉருவாகும். இந்த புத்தகம் உங்களது திரியை பற்ற வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.