வாலாஜாபாத் அருகே வேளியூர் ஊராட்சியில் தூய்மைப் பணியை தொடங்கி வைக்கிறார் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரையா. 
தமிழகம்

நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் வேளியூரில் தூய்மை பணிகள் தொடக்கம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மவாட்டம் வாலஜாபாத் ஒன்றியம் வேளியூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் நேற்று நடைபெற்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தூய்மை கிராம உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வாசிக்க அவர் தலைமையில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.

வேளியூர் ஊராட்சியில் உள்ள தெருக்கள், பள்ளிகள், நீர்நிலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். அவரும் பணியாளர்களுடன் சேர்ந்து குப்பைகளை அப்புறப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்குகளை அறவே ஒழிக்க வேண்டும். அதற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தங்களுடைய ஊராட்சியின் துய்மைக்கு ஊர் பொது மக்கள்தான் பொறுப்பு.

எனவே, ஊராட்சியை தூய்மையாக வைத்து கொள்ளுவதற்கு பொது மக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வேளியூர் ஊராட்சி சிறந்த ஊராட்சியாக திகழ அனைவரும் தங்களை முழுமையாக தூய்மை பணியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் கோ.சிவருத்ரைய்யா, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் தேவி,வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT