தமிழகம்

சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற எதிர்ப்பு: சென்னையில் ஊழியர்கள் சங்கம் போர்க்கொடி

எம்.மணிகண்டன்

சென்னையில் இயங்கி வரும் மத்திய பிளாஸ்ட்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்ற அங்கு பணியாற்றும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1968-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட சிப்பெட் கல்வி நிறுவனத்தில் பிளாஸ்டிக் தொழில் நுட்பம் சார்ந்த கல்வி வழங்கப் படுகிறது. சென்னையில் உள்ள நிறுவனத்தை தலைமையிடமாக கொண்டு மதுரை, அகமதாபாத், அமிர் தசரஸ், அவுரங்காபாத், போபால், புவனேஸ்வர் உட்பட 24 இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் சென்னை, அகமதாபாத், லக்னோ, புவனேஷ்வர் ஆகிய 4 மையங்களில் பிளாஸ்டிக் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி மையத்தின் அனுமதியோடும், அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைசிறந்த அரசுப் பல்கலைக்கழக ( சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம்) பாடத்திட்டத்தின்படியும் மேற்கண்ட பொறியியல் பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் இங்கு கல்வி கற்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 48 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு சிப்பெட் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிப்பெட் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர் ஏ.ஜி.எஸ்.நீலகண்டன் கூறியதாவது:

தொழில் துறை அமைச்சராக ஆர்.வெங்கட்ராமன் இருந்தபோது மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனமும் (சிஎல்ஆர்ஐ), மத்திய பிளாஸ்ட்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (சிப்பெட்) 1968-ல் தொடங்கப்பட்டன. இந்தியாவிலேயே லாபத்தில் இயங்குகிற அரசு நிறுவனங்களில் சிப்பெட்டும் ஒன்றாக உள்ளது.

இது கல்வி நிறுவனமாக மட்டுமன்றி, பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்களை சோதனை செய்யும் மையமாகவும், உற்பத்தி நிலையமாகவும் விளங்கி வருகிறது. ரூ.375 கோடி இருப்பினை கொண்டுள்ள இந்த நிறுவனம், 12-வது ஐந்தாண்டு திட்டத்துக்கு ரூ.1,000 கோடியை அளித்துள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க நிறுவனத் தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேம்பட்ட நிர்வாகத்துக்காக தலைமையகம் மாற்றப்படுவதாக காரணம் சொல்லப்படுகிறது. ஏற் கெனவே, 1999-ல் இந்த நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற அப்போதைய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு முயற்சிகள் மேற்கொண்டார். அதற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவே, சிப்பெட்டின் தலைமையகத்தை எந்த காலத்திலும் டெல்லிக்கு மாற்ற மாட்டோம் என உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது.

இடையில், 2007-ம் ஆண்டில் இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று கூறி தனியாருக்கு பங்குகளை விற்பனை செய்யும் முயற்சிகளும் நடந்தன. அவை முறியடிக்கப்பட்டு தற்போது நிறு வனம் லாபத் தில் இயங்குவ தோடு ரூ.375 கோடி இருப் பும் வைத்துள் ளது. இத் தகைய சூழலில், திறம் பட்ட நிர்வாகத் துக்காக டெல்லிக்கு மாற்றுகிறோம் என்கிறார்கள்.

ஏற்கனவே, டெல்லிக்கு மாற்றப்பட்டும், ஹெச்ஒசிஎல், ஹெச்எஃப்எல், ஹெச்ஐஎல், ஐபிஹெச்டி ஆகிய நிறுவனங்கள் பெரியளவில் சாதிக்கவில்லை. எனவே, சிப்பெட்டினை டெல்லிக்கு கொண்டு செல்லும் முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை இயக்குநர் அலுவலகத்தில் கேட்ட போது, ‘சிப்பெட் தலைமையகத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் 24 மையங்கள் உள்ளன. அகமதாபாத்தில் ஏதாவது புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் சென்னைக்கு வந்து ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதனால் பல நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே, நிர்வாக மேம்பாட்டுக்காக சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

SCROLL FOR NEXT