தமிழக - கர்நாடகா எல்லையில் 29 நாட்களுக்குப் பிறகு வாகனப் போக்குவரத்து சீராகியுள்ளது.
காவிரி நீர் பங்கீடு பிரச்சினையால் கடந்த மாதம் (செப்டம்பர்) 6-ம் தேதி முதல் தமிழக - கர்நாடகா இடையேயான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஒசூர் மாவட்டம் ஜூஜூவாடி எல்லை வாயிலாக கர்நாடகா பதிவெண் கொண்ட லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் தடையின்றி வந்து சென்றாலும், தமிழகத்திலிருந்து செல்லும் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டிருந்தது.
இந்நிலையில், 29 நாட்களுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) காலை ஜூஜூவாடி எல்லையில் தமிழக வாகனப் போக்குவரத்து சீரானது.
இருப்பினும் தமிழக அரசின் விரைவுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் நிலைமையை ஆய்வு செய்த பின்னரே அரசுப் பேருந்துகளை இயக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
6-ம் தேதி முதல்..
கடந்த செப்டம்பர் 6-ம் தேதி முதல் தமிழகம் - கர்நாடகா இடையே பேருந்து சேவை இல்லை. இடையில் செப்டம்பர் 11-ம் தேதி மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்து சேவை இல்லாத நிலையில் இரு மாநிலத்துக்கும் இடையே எல்லைப் பகுதியில் பொதுமக்கள் 1 கி.மீ. தூரத்துக்கு நடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்தது.