முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து தமிழக ஆளுநர் நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார். மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளை சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் வரவேற்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று திரும்பும் வரை தமிழகத்தின் நலன் கருதி பொறுப்பு முதலமைச்சர் ஒருவரையோ அல்லது அவருக்கு அடுத்துள்ள மூத்த அமைச்சரையோ நிர்வாகப் பணிகளை கவனிக்க நியமிக்க வேண்டும் என்று திமுக தலைவரும், நானும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். "அப்படியெல்லாம் தேவையில்லை" என்று மாநிலத்தின் நலனையும், மக்களின் நலனையும் பற்றி கவலைப்படாமல் சிலர் பேட்டி கொடுத்திருந்தாலும், தமிழக ஆளுநர் முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை நிதியமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கி ஆணை பிறப்பித்துள்ளார். கூடவே அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்குவார் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரில் இந்த நிர்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக ஆளுநரே தெரிவித்துள்ளார். தமிழகத்தை காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என்று பல்வேறு பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. காவிரி தொழில் நுட்ப குழு காவிரி டெல்டா விவசாயிகளை சந்தித்து விட்டுச் சென்றுள்ளது. வரும் 17 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. வட கிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கிறது. இது போன்ற மாநிலத்தின் பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகளை கலந்தாலோசிக்க அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த அமைச் சரவைக்கு ஒரு தலைவர் தேவை. அப்போதுதான் அமைச்சரவைக் கூட்டங்களைக் கூட்டி மாநில நலன் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். இந்த சூழ்நிலையில் மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமாகா வரவேற்கிறது
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருப்பதாவது: முதல் வர் ஜெயலலிதா உடல்நலமின் மையால் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தமிழக மக்களின் நலன் கருதி பல்வேறு அரசு துறைகள் அனைத்தும் தொய்வின்றி நடை பெற வேண்டும். இதற்கு ஏற்ற வாறே அரசியலமைப்புச் சட்டத் திற்கு உட்பட்டே முதல்வரின் பொறுப்புகளை மாநில நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத் திடம் ஒப்படைத்து தமிழக ஆளுநர் ஆணை பிறப்பித்து இருப்பதை தமாகா முழுமனதுடன் வரவேற்கிறது.
இவ்வாறு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.