சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் தீவிர சோதனை நடைபெற்றது.
காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்தது இண்டிகோ விமானம். அந்த விமானத்தில் 167 பயணிகள் இருந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்படது. விமான நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து விமானத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நடத்தி சோதனையில் மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
துபாய் செல்ல வேண்டிய விமானம் சற்று தாமதாகப் புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில், விமான நிலையத்திற்கு வந்த தொலைபேசி எண்ணை கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டது.
சிக்கிய நபர்: சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை சோதித்தபோது அது சென்னை மணலியைச் சேர்ந்த மாரிச்செல்வனின் எண் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த விமானத்தில் தனது சகோதரி மாரீஸ்வரி கணவருடன் துபாய் செல்லவிருந்ததாகவும் தங்கையை பிரிய மனமில்லாமல் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.