தமிழகம்

கண்ணகி நகரில் பயங்கரம்: கோஷ்டி மோதலில் 3 இளைஞர்கள் கொலை

செய்திப்பிரிவு

கண்ணகி நகரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர்.

சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர்கள் கலியா என்ற ரஞ்சித் குமார் (18), செங்கோட்டையன் (20). இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல்களும் ஏற்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்பாகவும் அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கண்ணகி நகர் மாநகராட்சி பூங்காவில் கலியா தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு செங்கோட்டையன் உட்பட 5 பேர் கத்தி, அரிவாளுடன் வந்தனர். அவர்கள் திடீரென கலியாவை சரமாரியாக வெட்டினர். அவரது தரப்பினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில் கலியா அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அவரது நண்பர் செபஸ்டின் மில்லர் (25), என்பவரை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் விரட்டனர். தப்பி ஓடி மாடியில் ஏறிய மில்லர், கழிவு நீர் பைப்பை பிடித்து இறங்கினார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்தவரின் தலையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கல்லைப் போட்டு கொலை செய்தனர்.

இந்த மோதலில் செங்கோட்டை யன், சக்திவேல் உட்பட பலர் காயம் அடைந்தனர். அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சக்திவேல் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

3 பேர் கைது

மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் விவேகானந்தன், அப்பகுதியைச் சேர்ந்த ஜோபிடா மணி என்ற மணிமாறன் (23), தாட்சா என்ற தமிழரசன் (20), தில்லானா என்ற அற்புத ராஜ் (23) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார். தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து, அடையார் துணை ஆணையர் சுந்தரவடிவேல் கூறும் போது, ‘‘மோதலில் ஈடுபட்டவர் களில் 3 பேர் மீது கஞ்சா விற்பனை தொடர்பாக வழக்குகள் உள்ளன. முன்விரோதம் காரணமாகவே மோதல் நடந்துள்ளது. கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

போலீஸ் குவிப்பு

இந்த சம்பவத்தால் கண்ணகி நகர் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT