அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு தீபாவளி முன்பணத்தையும், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வையும் உடனே வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 50 ஆண்டுகளாக முன் பணம் வழங்கப்பட்டு வந்தது. அதுபோல கடந்த 45 ஆண்டுகளாக தீபாவளிக்கு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒரு கிலோ இனிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த ஆண்டு இதுவரை பண்டிகை முன்பணமும், இனிப்பும் வழங்கப்படவில்லை. இதனை உடனே வழங்க வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளன.
தினமும் சுமார் 2 கோடி பேர் அரசுப் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். பொதுமக்களுக்கு முக்கிய சேவையாற்றும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு முன்பணம், இனிப்பு வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. எனவே, உடனடியாக முன்பணம், இனிப்பு வழங்க வேண்டும்.
அதுபோல அரசு ஊழியர்களுக்கு 1-7-2016 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பு வழங்கக்கோரியும், சம்பளப் பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரியும் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று அகவிலைப்படி உயர்வையும், 20 சதவீத இடைக்கால நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.