கீழாம்பல் அரசு தொடக்கப் பள்ளியில் மடிக்கணினி மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் கே.ராமச்சந்திரன். படம்: எல்.பாலச்சந்தர் 
தமிழகம்

ராமநாதபுரம் | மாணவர்களுக்கு உலக தரத்தில் கல்வி: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ராமநாதபுரம் ஆசிரியர் பெருமிதம்

கி.தனபாலன்

ராமநாதபுரம்: உலகத் தரமான கல்வி கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் கல்வி கற்றுத் தருகிறேன் என்று தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் ஆசிரியர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 46 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் கே.ராமச்சந்திரன் (40) மட்டுமே தமிழகத்திலிருந்து இவ்விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கீழாம்பல் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி, இடைநிலை ஆசிரியர் கே.ராமச்சந்திரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு கீழாம்பல் கிராமத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள், 17 மாணவிகள் என மொத்தம் 30 பேர் படித்து வருகின்றனர்.

இங்கு 2008-ம் ஆண்டிலிருந்து ஆசிரியராக பணியாற்றி வரும் ராமச்சந்திரன், கணினி மற்றும் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளார்.

மாணவர்களுக்கு கற்றுத் தரும் பாடங்களில் கேள்விகள் கேட்டு சிறப்பாக பதிலளிப்போருக்கு உடனடியாக பரிசுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறார். இசை, ஓவியம், சிலம்பம், தட்டச்சு உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கற்றுத் தர ஏற்பாடு செய்துள்ளார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதுடன், மூலிகைத் தோட்டமும் அமைத்துள்ளார்.

மாணவர்கள் தங்களது கருத்துகள், புகார்களை கடிதம் மூலம் தெரிவிக்க பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டியை வைத்துள்ளார். இப்பள்ளிக்கு கடந்த 2021-ம் ஆண்டில் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர கீழாம்பல் கிராம மக்களுக்கு உதவும் வகையில் சான்றிதழ் விண்ணப்பம், ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் ஆவணங்களை நகலெடுத்து தருதல் உள்ளிட்ட சேவைகளையும் இலவசமாக செய்து வருகிறார். இங்கு படிக்கும் 30 மாணவர்களும் கரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்க ராமச்சந்திரன் 30 மொபைல் போன்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் 2 தன்னார்வலர்களை நியமித்து, மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார்.

இது தொடர்பாக ஆசிரியர் கே.ராமச் சந்திரன் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் உலகத் தர கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளேன். எனக்கு கிடைத்த நல்லாசிரியர் விருதை அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்துக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த விருது மூலம் எனக்கு கிடைக்கும் ரூ.50 ஆயிரத்தை ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

மாணவர்கள், ஆசிரியர்கள் வேறுபாடுகளை மறந்து பழக வேண்டும் என்பதற்காக நானும் மாணவர்களின் சீருடையை அணிந்துதான் பள்ளிக்கு வருகிறேன். இந்த பகுதியில் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT