சிவகங்கை: தமிழகத்தில் முதல் முறையாக காளையார் கோவில் அருகே அரிவாள் தயாரித்துக் கொடுத்த பட்டறை உரிமையாளரை ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகள் அரிவாள் செய்வதற்குப் புகழ்பெற்ற பகுதிகளாக உள்ளன. மாவட்டத்தில் பல இடங்களிலும் அரிவாள் பட்டறைகள் உள்ளன. கடந்த ஆண்டு ரவுடிகள், குற்றவாளிகளுக்கு அரிவாள், வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் எளிதில் கிடைப்பதைத் தடுக்க போலீஸார் அரிவாள் பட்டறைகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். அதன்படி பட்டறைகளில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். ஆதார் கார்டு நகல் கொடுத்தால் மட்டுமே அரிவாள் தயாரித்துக் கொடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் நேற்று சிவகங்கை அருகே கண்டாங்கிப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை புதுப்பட்டியைச் சேர்ந்த சோனைமுத்து (25), சிவ கங்கையைச் சேர்ந்த சம்சுதீன் (20), சபரிவேலன் (19), சிவகங்கை அருகே தேவனிப்பட்டியைச் சேர்ந்த விக்னேஸ்வர் (21), ராஜ்குமார் (24) என்பதும் அவர்கள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள், வாள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எச்சரிக்கையையும் மீறி அரிவாள், வாள்களை தயாரித்துக் கொடுத்ததாக காளையார்கோவில் அருகேயுள்ள பள்ளித்தம்பத்தைச் சேர்ந்த பட்டறை உரிமையாளர் ராஜேஷ் (36) என்பவரையும் கைது செய்தனர். அரிவாள் தயாரித்து கொடுத்ததற்காக ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டறை உரிமையாளரை கைது செய்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை.