வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமானில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை. இது ஈரப்பதத்தை இழுத்துக் கொண்டுள்ளதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவந்தானில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. உசிலம்பட்டி, பெரியாரில் தலா 80 மில்லி மீட்டர், வாடிப்பட்டியில் 70 மில்லி மீட்டர், நிலக்கோட்டை, சூரங்குடி, கந்தர்வக்கோட்டை, திருமங்கலத்தில் தலா 50 மில்லி மீட்டர், மணியாச்சி, நத்தம், பெரியகுளம், விளாத்திகுளம், கோவில்பட்டி, காரைக்குடி, வத்திராயிருப்பு, வில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர், சாத்தான்குளம், பவானிசாகர், பெரியகுளம், திருச்சி விமான நிலையம், பழநி, அன்னூர், அரண்மனைப்புதூர், மதுரை விமான நிலையம், அதிராம்பட்டினம், ஆண்டிபட்டி, கமுதி, போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது