சென்னை பிராட்வே ஸ்ட்ரிங்கர் தெருவை சேர்ந்த வி.நம்பிராம், சந்திராதேவி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஸ்ட்ரிங்கர் தெருவில் எங்களுக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் விதிமீறி கட்டப்பட் டுள்ளதாக கூறி கடந்த ஏப்ரல் 13-ம் தேதி மாநகராட்சி அதிகாரி கள் ‘சீல்’ வைத்தனர். அந்த கட்டிடத்தில் உள்ள விதிமீறல் களை சரி செய்வதற்கு ஏதுவாக ‘சீலை’ அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘ தரைத்தளத்தில் பொது பயன்பாட்டிற்கு விட வேண்டிய இடம் கூட விடாமல் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதைச்சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. எனவே, இந்த விதிமீறல்களை சரி செய்வது தொடர்பாக கட்டிட கட்டமைப்பு பொறியியல் வல்லுநர்களிடம் ஆலோசனைப் பெற்று அதை மாநகராட்சி அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும்.
இவற்றை ஆய்வு செய்த பின்னரே அதிகாரிகள் சீலை அகற்ற வேண்டும். அதேபோல அந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணி நடைபெறும்போது மனுதாரர் உள்ளிட்ட உரிமையாளர்களோ அல்லது வெளிநபர் யாரும் உள்ளே குடியிருக்கக் கூடாது. சீரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் பகுதிகள் இடித்து சரிசெய்யப்படவில்லை என்றால் மீண்டும் அந்த கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்கலாம்’’ என உத்தரவிட்டனர்.