திருவள்ளூர் மாவட்டத்தில் சீனப் பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு தினங்களில் 120-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல் பட உள்ளன. இந்த கடைகளுக் கான பாதுகாப்பு மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது: மாவட்டத்தில் தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசு உரிமத்துடன் செயல்பட உள்ள பட்டாசுக் கடை களுக்கு கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வின்போது, பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள், தீய ணைப்பு கருவிகள், பாதுகாப்பான முறையில் விற்பனை நடைபெறு கிறதா என்பவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
புகை பிடிக்கக்கூடாது என்ற வாசகம் உள்ள அறிவிப்பு பலகை வைத்து அதன்படி கடைகளின் அருகில் யாரையும் புகை பிடிக்க அனுமதிக்கக் கூடாது. 125 டெசிபிலுக்கு மேல் வெடிக்கக் கூடிய அணுகுண்டு, வெங்காய வெடி உள்ளிட்ட வெடி வகைகளை விற்பனை செய்யக் கூடாது. பட்டாசு விற்பனை உரிமத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் பட்டாசுகளை சேமித்து வைத்து விற்பனை செய்யக்கூடாது.
சீனப் பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள், உரிமம் இல் லாமல் பட்டாசு சேகரித்து வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். சீனப் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவது தொடர் பான புகார்களை பொதுமக்கள் காவல் துறையினர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுபாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான, 1077- யை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.