பெங்களூருவில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரையடுத்து போலீஸார் நடத்திய சோதனையில் தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அங்கு இருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த 4 பெண்களையும் மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (எ) சத்தியநாராயணன். இவர், தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளராக (அரசியல்) இருந்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரம் பானசவாடி காவல்நிலைய போலீஸாருக்கு, மசாஜ் சென்டர் என்கிற பெயரில் அப்பகுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மசாஜ் சென்டரில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அமைச்சரின் உதவியாளர் சத்யா உட்பட 11 பேர் சிக்கினர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பெண்களும் அங்கிருந்து மீட்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், சத்தியநாராயணன், மசாஜ் சென்டரின் உரிமையாளர் பாலாஜிகவுடா, மேலாளர் உமேஷ் உட்பட 11 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 17 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.