இந்த ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணை ஜூலை 1-ம் தேதி வெளியாகாது என்றும், புதிய கால அட்டவணையை வெளியிட 2 மாதம் வரை தாமதமாகலாம் எனவும் தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சி முதல்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இதுவரை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20-ம் தேதியில் இருந்து 28-ம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அப்போது அறிவிக்கப்படும் புதிய ரயில்கள் குறித்த விவரங்களையும் இணைத்து ஜூலை 1-ம் தேதி ரயில்வே கால அட்டவணை அந்தந்த ரயில்வே பொதுமேலாளரால் வெளியிடப்படும்.
ஆரம்பத்தில் தெற்கு ரயில்வேக்கு தனியாக கால அட்டவணை தயாரித்து வெளியிடப்பட்டது. அப்போது தெற்கு ரயில்வேயில் இணைந்திருந்த பெங்களூரில் கால அட்டவணை அச்சிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக தென்மண்டலத்தில் உள்ள தெற்கு மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, தெற்கு ரயில்வே, கொங்கன் ரயில்வே ஆகிய நான்கிற்கும் சேர்த்து ஒரே கால அட்டவணையாக ஹைதராபாத்தில் அச்சிடப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மேற்சொன்ன நான்கு ரயில்வேக்களுக்கான கால அட்டவணை புத்தகமும், அகில இந்திய அளவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ராஜதானி, சதாப்தி போன்ற முக்கிய ரயில்களின் விவரங்களும் அடங்கிய “ட்ரெயின்ஸ் அட் கிளான்ஸ்” என்ற மற்றொரு கால அட்டவணை புத்தகமும் வெளியிடப்படும்.
தெற்கு ரயில்வேயில் ஆண்டுதோறும் தென்மண்டல “டைம் டேபிளை” பொருத்தவரை ஒரு லட்சம் ஆங்கில கால அட்டவணை புத்தகங்களும், சுமார் 25 ஆயிரம் தமிழ் கால அட்டவணை புத்தகங்களும் விற்கப்படும்.
ஜூலை 8-ல் ரயில்வே பட்ஜெட்
பாஜக தலைமையில் அமைந்த புதிய அரசு ஜூலை 8-ம் தேதி ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு ரயில்வே கால அட்டவணை வழக்கம்போல ஜூலை 1-ம் தேதி வெளியாகாது என்றும் ரயில்வே கால அட்டவணை வெளியாவது செப்டம்பர் மாதம் வரை தாமதமாகும் என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் ஹைதராபாத்தில் புதிய ரயில்வே கால அட்டவணை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் ஜூலை 8-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அப்போது புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். கூடுதல் தேவை காரணமாக ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் நிற்காமல் தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிய ரயில்களுக்கான பாதை, இணைப்பு ரயில் ஆகியவற்றைக் கணக்கிட்ட பிறகே புதிய ரயில்களை இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும்.
ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும் அதன் போக்குவரத்து தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே கால அட்டவணையில் குறிப்பிடப்படும்.
தற்போது அனைத்து வகுப்புகளுக்கான ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாலும், புறநகர் கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாலும் புதிய கட்டணத்தை ரயில்வே கால அட்டவணையில் சரிவர இடம்பெறச் செய்ய வேண்டும். அதற்கு புதிய ரயில்களின் விவரம், புதிய கட்டண விவரம் ஆகியவற்றை முற்றிலுமாக சரிபார்த்த பிறகே அச்சுக்கு அனுமதிக்க முடியும்.
அதன்பிறகு டெண்டர் விடப்பட்டு லட்சக்கணக்கில் ரயில்வே புதிய கால அட்டவணை அச்சிடப்பட்டு, அந்தந்த ரயில்வே தலைமையிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு 60 நாட்கள் வரை ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரி கூறினார்.