தமிழகம்

முதல்வரின் துறைகள் மாற்றம்: உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மாற்றப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன் மருத்துவர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளிக்கின்றனர். முதல்வரின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா பணிக்கு திரும்பும் வரை அவரது துறைகள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மாற்றப்படுவதாகவும், அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அவரே தலைமை வகிப்பார் என்றும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.

முதல்வரின் துறைகள் நிதி அமைச்சருக்கு மாற்றப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் முதல்வரின் உடல்நிலை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT