நம் முன்னோர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த, வறட்சியையும் வெள்ளத்தையும் தாங்கி வளரக் கூடிய பாரம்பரிய நெல் ரகங் களைப் பயிரிட்டு வந்தனர். கடந்த 50 ஆண்டுகளில் விளைச்சலை மட்டுமே குறிவைத்து வந்த மாற் றுப் பயிர்களால் அத்தகைய ரகங்கள் அழிந்து போயின.
தற்போது சாகுபடி செய்யப் படும் நெல் ரகங்கள் பெரும் பாலும் வறட்சி, வெள்ளம், நோய் இவற்றில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்படுகின்றன. மேலும், பயிர் வளர்ச்சிக்கும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் ரசாயனங்களை அதிகமாக பயன்படுத்துவதால், அத்தகைய ரக அரிசியை உணவாக பயன் படுத்தும் போது பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் கூறுகின் றன.
இந்நிலையில், அழிந்து போன பாரம்பரிய நெல் ரகங் களை மீட்டெடுத்து அத்தகைய ரகங்களை இயற்கை முறை யில் சாகுபடி செய்து பரவ லாக்கும் முயற்சியில் புதுக்கோட் டையைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் குழுவாக ஈடுபட் டுள்ளனர். அதன்படி, இவர்கள் மூலம் கடந்த ஆண்டைவிட நிகழ்வாண்டில் சுமார் 1 டன் விதை கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாக இயற்கை விவசாயிகள் கூறுகின் றனர். இதுகுறித்து புதுக்கோட் டையைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குநர் எ.ஆதப்பன் கூறியதாவது:
‘‘புதுக்கோட்டையில் சுமார் ஆயிரம் விவசாயிகளை ஒருங்கி ணைத்து அமைப்பை ஏற்படுத்தி பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். இந்த நெல் ரகங்கள் வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை. அதேபோல, மழைக் காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கினாலும் மற்ற பயிர்களைப்போல அவ்வள வாக பாதிக்கப்படுவதில்லை. பாரம்பரிய நெல் ரகங்களைப் பரவலாக்க வேண்டும் என்பதற்காக விதைகளை விலைக்கு விற்காமல் ஒரு கிலோ விதை கொடுத்தால் அறுவடை செய்த பிறகு, இரண்டு கிலோ விதை கொடுக்க வேண்டும் என்ற முறையிலும் விவசாயிகளுக்கு விதை வழங்கப்படுகிறது.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விலைக்கு விதை விற்பனை செய்யப்படுகிறது. 2 மாதங் களில் இருந்து 6 மாதங்களில் விளையக்கூடிய பூங்கார், மாப்பிள்ளை சம்பா, பனங் காட்டு குடவாழை, கருத்தக் கார், கருடன் சம்பா, சிவப்பு கவுனி, சண்டிகார், கருங் குறுவை, குருவை களஞ்சியம், தூயமல்லி, நீலச்சம்பா, கிச்சடிச் சம்பா போன்ற ரகங்கள் விநி யோகம் செய்யப்படுகின்றன.
மேலும், காட்டுயானம், சம்பா மோசனம், காளான்நமக், வாழான் சம்பா, தேங்காப்பூ சம்பா, ராஜபோகம், பொம்மி, ஓட்டடம், ஆத்தூர் கிச்சடி சம்பா, சேலம் சன்னா, முற்றின சன்னம், சின்னார், குழியடிச்சான், துளசி வாசனை சீரக சம்பா, கொத்தமல்லி சம்பா, சூரக்குறுவை, தங்கச் சம்பா, செம்புளி சம்பா, நவரா, இலுப்பைப்பூ சம்பா, அறுபதாம் குறுவை, சீரகச் சம்பா, சொர்ணமுசிறி, சிவப்பு குருவிக்கார், கருப்புக் கவுனி, மிளகி, கைவிரச்சம்பா உள்ளிட்ட ரகங்களுக்கான விதை நெல்லும் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த ரகங்களில் கடலோரப் பகுதிகளில் வளரும் தன்மை யுள்ள ரகங்களும் உள்ளன. நிகழ்வாண்டு இதுவரை தமிழக மெங்கும் சுமார் 5 டன் விதை நெல் விநியோகம் செய்துள் ளோம். இது கடந்த ஆண்டைவிட ஒரு டன் கூடுதலாகும். தேவையான விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களும் இலவசமாக அளிக்கப்படுகிறது. அத்துடன், விளையும் நெல்லை நாங்களே கொள்முதல் செய்து அதை மீண்டும் விதையாகவும், மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்வதால் விவசாயிகள் பயனடைகின்றனர்.
தற்போது நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், பாரம்பரிய நெல் ரகங்கள், சிறு தானியங்கள் உள்ளிட்ட வற்றை உணவாகச் சேர்த்துக் கொள்ளுமாறு இயற்கை ஆர்வலர்களும், பல்வேறு துறை அறிஞர்களும் அறிவுறுத்தி வரும் நிலையில், பாரம்பரிய நெல் ரகங்கள் மீது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது” என்றார்.