தமிழகம்

திருக்குறள் - ஜி.யு.போப் | “விரக்தியின் வெளிப்பாடுதான் ஆளுநரின் பேச்சு” - அமைச்சர் மனோ தங்கராஜ்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி: "ஜி.யு.போப் போன்றவர்கள் தமிழகத்தில் வந்து செய்திருக்கக் கூடிய பணிகள், ஆளுநருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை" என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஜி.யு.போப் போன்றவர்கள் தமிழகத்தில் வந்து செய்திருக்கக்கூடிய பணிகள், ஆளுநருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பாஜகவில் இருக்கின்ற பல தலைவர்கள் மிஷினரிகள் ஏற்படுத்திய கல்லூரிகளில் படித்தவர்கள்தான். நான் அதோடு இதை தொடர்புபடுத்த விரும்பவில்லை.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்த விதத்தில் திருக்குறள் இல்லை. அது அவர்களுக்கு மிகப் பெரிய வருத்தம். திருக்குறள் ஒரு குறிப்பிட்ட சமயத்தை அல்லது மதம் சார்ந்த கருத்துகளை கூறியிருந்தால், அதை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

ஆளுநரின் பேச்சை விரக்தியின் வெளிப்பாடாகத்தான் நான் பார்க்கிறேன். திருக்குறள் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றுதான் கூறுகிறது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தலைநகர் டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் டெல்லி தமிழ் கல்வி கூட்டமைப்பின் சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "பிரிட்டிஷாரின் கிழக்கு இந்திய கம்பெனியும், ஜி.யு.போப் போன்ற மிஷனரிக்களும் திருக்குறளின் பக்தி என்ற ஆன்மாவை வேண்டுமென்றே மறைத்துள்ளனர்.

திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப். அவருடைய மொழிபெயர்ப்பே இன்றளவிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த மொழிபெயர்ப்பு காலனி ஆதிக்க மனோபாவத்துடன் இந்தியாவின் ஆன்மிக ஞானத்தை சிறுமைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். | விரிவாக வாசிக்க > திருக்குறளில் 'பக்தி' ஆன்மாவை வேண்டுமென்றே சிதைத்தார் ஜியு போப்: ஆளுநர் ஆர்.என்.ரவி

SCROLL FOR NEXT