சென்னை: பருவமழையை எதிர்கொள்ள என்னென்ன தேவை, எங்கெல்லாம் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது அதற்கான மாற்று நடவடிக்கை உள்ளிட்ட விரிவான விவரங்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள ஒவ்வொரு வார்டு உதவி பொறியாளர்களுக்கு மாநகராட்சி பிறப்பித்துள்ள உத்தரவு: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தயாராக வேண்டும். சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முழு ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும், வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் முழு விவரங்களை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து மண்டலம் வாரியாக ஒவ்வொரு வார்டு உதவி பொறியாளர்களுடனும் சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் மூலம் நேர்காணல் நடத்தப்படும்.
இதில், தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் நிலை குறித்தும் மாநகராட்சியின் ஒப்பந்தத்தில் உள்ளவாறு அறிவியல் ரீதியாக மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்படுகிறதா? அதனை உதவி பொறியாளர்கள் கண்காணித்து வருகின்றனரா? என்பதனை வரைப்படத்துடன் கூடிய முழு விவரம் இந்த நேர்காணலில் கேட்கப்படும்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும், ஒவ்வொரு வார்டிலும் உள்ள தெருக்களின் விவரம், மழைநீர் வடிகாலின் நிலை, எத்தனை இடங்களில் பணி முடிந்துள்ளது. இன்னும் பணி முடியாத இடங்கள் எவை? மழைநீர் எவ்வாறு வெளியேறும் என்ற விவரம், மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளின் எண்ணிக்கை, அதற்கான மாற்று ஏற்பாடு, பருவமழையை எதிர்கொள்ள தேவையானவை, எவ்வளவு?
தற்போது உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை, மழை நீரை வெளியேற்ற தேவைப்படும் மோட்டார்கள் மற்றும் அதன் திறன், நிவாரண முகாம்கள், வார்டுகளில் அமைந்துள்ள நீர் நிலைகளின் எண்ணிக்கை, வார்டுகளுக்கு ஏற்ப பருவமழையை எதிர்கொள்ள உதவிப் பொறியாளர்களின் ஆக்கப்பூர்வமான யோசனை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தலைமை அலுவலகத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.