தமிழகம்

சாலைகளை தூய்மைப்படுத்த ரூ.5 கோடியில் 4 நவீன இயந்திரங்கள்: சென்னை மாநகராட்சி வாங்குகிறது

செய்திப்பிரிவு

சென்னையில் சாலைகளை தூய்மைப் படுத்த ரூ.5 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் 4 நவீன இயந்திரங்களை சென்னை மாநகராட்சி வாங்குகிறது.

நாட்டை தூய்மையாக்கும் நோக்கில் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்துக்காக 0.5 சதவீதம் மேல் வரி விதிக்கும் நடைமுறை கடந்த நவம்பர் 15-ம் தேதி நாடு முழுதும் அமலுக்கு வந்தது. இந்த வகையில் மத்திய அரசுக்கு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை ரூ.3,750 கோடி வரியாக கிடைத்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியை, அந்தந்த மாநிலங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு பிரித்தளித்துள்ளது. அந்த நிதியைக் கொண்டு, உள்ளாட்சிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்ட நிதியில், ரூ.5 கோடியே 33 லட்சத்து 17 ஆயிரத்து 200 செலவில், சாலைகளை துரிதமாக தூய்மைப்படுத்த 4 நவீன இயந்திரங்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சாலையோரம் உள்ள மண் மற்றும் சாலை தடுப்புகளின் அருகில் குவியும் மண் போன்றவற்றை கையால் முழுமையாக அகற்ற முடியவில்லை. இதனால் ஏற்கெனவே சாலையை தூய்மையாக்கும் 12 இயந்திர பெருக்கிகள் வாங்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன. தூய்மை இந்தியா திட்ட நிதி கிடைத்த நிலையில், அந்த நிதியைக் கொண்டு கூடுதலாக 4 நவீன இயந்திர பெருக்கிகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டு இயக்குதல் மற்றும் பராமரித்தலையும், இயந்திரத்தை வழங்கும் நிறுவனமே செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இந்த இயந்திரங்கள் வாங்கப்படுகிறது. இவை விரிவாக்கம் செய்யப்பட்ட மண்டலங்களுக்கு அனுப்பப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT