தமிழகத்தில் இந்த நிதியாண்டில் அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதற்கு, கால்நடைத்துறையினருக்கு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர்கள் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் இன்று சென்னையில் நடந்தது.
அப்போது அமைச்சர் பேசுகையில், ''கடந்த 2011-12 முதல் 2015-16 வரை 60 ஆயிரம் பயனாளிகளுக்கு 60 ஆயிரம் கறவைப் பசுக்கள், ஒரு பயனாளிக்கு 4 ஆடு வீதம், 70 ஆயிரம் பயனாளிகளுக்கு 28 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தொடர்ந்து நடப்பாண்டிலும் செயல்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் கோமாரி நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் நடந்த 11வது சுற்று தடுப்பூசி, அனைத்து கால்நடைகளுக்கும் விடுபடாமல் 100 சதவீதம் போடப்பட்டுள்ளது. இதற்கு அலுவலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இறவையில் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் சாகுபடி மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தீவன சோளம் மற்றும் தீவன காராமணி விதைகள் வழங்கப்ப்டடுள்ளன.
கோழியின அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இதுவரை 244 கறிக்கோழிப் பண்ணைகள், 11 ஆயிரத்து 70 நாட்டுக்கோழிப் பண்ணைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் நடப்பாண்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். கால்நடைகளுக்கான நோய் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்'' என்று அமைச்சர் தெரிவித்தார்.