திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக முழுமையாக செயல்படாமல் இருந்த உழவர் சந்தைகள், மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் தீவிர முயற்சியால் புத்துயிர் பெற தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் விவசாயிகள், விளைநிலத்தில் விளையும் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1999 -ம் ஆண்டு உழவர் சந்தை திட்டத்தை தொடங்கினார். அத்திட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில், நாரவாரிகுப்பம், திருவள்ளூர், ஆவடி, பேரம்பாக்கம், திருத்தணி ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த உழவர் சந்தைகளில், விற்பனை குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடைகளை நடத்த விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் தற்போது புத்துயிர் பெற தொடங்கியுள்ளன. இதுகுறித்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: தமிழக அரசு, உழவர் சந்தைகளை புனரமைத்து, புதுபொலிவுடன் முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளை சுற்றியுள்ள கிராமங்களில், தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுடன் இணைந்து, வாரத்துக்கு இரு முறை முகாம்களை நடத்தி, விவசாயிகள், நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அதன் விளைவாக, நாரவாரிகுப்பம், பேரம்பாக்கம், ஆவடி ஆகிய உழவர் சந்தைகளில் உள்ள 60 கடைகளில், 20-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் உழவர் சந்தையில், இனிய விடியல் என்ற தன்னார்வ அமைப்பும், ஈக்காடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும் இணைந்து, ஆன் லைன் மூலம் காய்கறி வகைகளை விற்பனை செய்து வருகிறது.
இப்படி படிப்படியாக புத்துயிர் பெறத் தொடங்கியுள்ள திருவள்ளூர் மாவட்ட உழவர் சந்தைகள் அனைத்தையும் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவர, மாவட்ட வேளாண்மை விற்பனை, வணிகத் துறை தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
விரைவில் திருவள்ளூர் உழவர் சந்தையை ரூ.44 லட்சம் மதிப்பிலும், நாரவாரிகுப்பம் உழவர் சந்தையை ரூ.20 லட்சம் மதிப்பிலும் புனரமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது என்றனர்.