தமிழகம்

பருவமழை முன்னெச்சரிக்கை: உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று உள்ளாட்சி அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் மற்றும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அத்துறைகளின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாவது:

தொற்று நோய் ஒழிப்பு பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள இடங்களில் சிறப்பு குழுக்கள் அமைத்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை வீடு வீடாகச் சென்று மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் காலை 6 மணிக்கு நேரில் சென்று துப்புரவு மற்றும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும்போது, லாரியின் தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், ஓட்டுநரின் முன் அனுபவம் ஆகியவற்றை ஆய்வு செய்து, லாரியை பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளதால் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், தூர் வாரியும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வேலுமணி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT