தமிழகம்

அப்போலோவில் முதல்வர் நலன் விசாரித்தார் கரண் அதானி

சி.கண்ணன்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து அதானி குழுமத்தைச் சேர்ந்த கரண் அதானி இன்று (செவ்வாய்க்கிழமை) கேட்டறிந்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது லண்டன் மருத்துவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவர்களிடம் விசாரித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து அதானி குழுமத்தைச் சேர்ந்த கரண் அதானி கேட்டறிந்தார்.

பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், "அகமதாபாத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகவே சென்னை வந்துள்ளேன். இங்கு மருத்துவமனையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்தேன். அவருடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் இருந்தார். இருவருமே, தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல முறையில் தேறி வருவதாகக் கூறினர். அவர் வெகு விரைவில் பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்பி, தமிழக மக்கள் முன்னேற் றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன், நடிகர் ராதா ரவி உள்ளிட்டோரும் மருத்துவ மனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந் தனர்.

சிறப்புப் பூஜை

மருத்துவமனைக்கு வெளியே அதிமுக மகளிர் அணி சார்பில் முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. எம்ஜிஆர் மன்ற திருவள்ளூர் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீச்சட்டி எடுத்தனர். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் நோன்பு இருந்து தொழுகை செய்தனர். மதுரையில் இருந்து வந்திருந்த பார்வையற்றோர் 25 பேர் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

          
SCROLL FOR NEXT