நாடு முழுவதும் உள்ள அரசு, பொது, தனியார் துறைகளில் அந்தந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வர்த்தக வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், தனியார் வங்கிகள் போன்ற வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
பொது மக்கள் வங்கிக்கணக்கை தொடங்கி சேமிப்பதற்கும், கடன் உதவி பெறுவதற்கும், வாடிக்கையாளார்களுக்கு பல்வேறு சேவைகள், மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை இந்த வங்கிகள் மூலம் மேற்கொள்ள முடிகிறது. மேலும் ஏ.டி.எம். மையம் மூலமும் இந்த வங்கிகள் சேவை புரிந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகளிலும் மற்றும் ஏ.டி.எம். மையங்களிலும் ஆங்கில மொழி மட்டுமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக சேமிப்பு கணக்கு புத்தகங்கள், காசோலை, வரைவோலை ஆகியவற்றிலும் ஆங்கிலமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் தமிழ் மொழி பயன்பாட்டில் இல்லை. இதனால் பெரும்பாலும் சிரமப்படுவது வங்கியின் வாடிக்கையாளர்கள் முக்கியமாக கிராமப்புறத்தைச் சார்ந்த சாதாரண மக்கள் தான்.
பொது மக்கள் பயன்படுத்தும் வங்கிகள், பொதுத்துறைகள் ஆகியவற்றில் பல்வேறு மொழி பேசும் அதிகாரிகள், தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதனால் சாதாரண மக்கள் அவர்களோடு உரையாடுவதற்கும், விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மாநில மொழி பேசும் அதிகாரிகளை நியமித்தல், அதிகாரிகள் மாநில மொழியை பேசுவதற்கு பயிற்சி அளித்தல், விண்ணப்பங்கள் மாநில மொழியில் இடம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசும், அந்தந்த துறைகளும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழ் மொழிக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியும் அரசு, பொது மற்றும் தனியார் துறைகளில் தமிழ் மொழியின் பயன்பாடு முழு அளவில் இல்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது. தமிழகத்தில் இயங்கும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு தற்போது இது குறித்து தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள அவர்களது நியாயமான கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்று உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, பொது, தனியார் துறைகளில் தமிழ் மொழியும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்'' வாசன் தெரிவித்துள்ள்ளார்.