தமிழகம்

நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க மாற்று தீர்வு முறைகளை பின்பற்ற வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

செய்திப்பிரிவு

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க மாற்று முறை தீர்வு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். சமரசம் மூலம் தீர்வு காணத்தக்க வழக்குகளை கண்டறிந்து சமரச தீர்வு மையத்துக்கு நீதிபதிகள் பரிந்துரைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கூறியுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு சமரச தீர்வு தொடர்பான விழிப்புணர்வு பயில ரங்கம், சென்னையில் உள்ள மாநில சட்டப் பயிலகத்தில் (ஜுடீசியல் அகாடமி) நேற்று நடந்தது. இதில் சிறப்புரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பேசியதாவது:

மாவட்ட அளவிலான நீதிபதி களுக்கும், உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையே இடைவெளி உள்ளது. அதை அகற்ற வேண்டும். இந்த இடைவெளி குறையும்போது தான், நீதிபதிகளின் பணித்திறன் அதிகரிக்கும். அதற்கு இதுபோன்று நிறைய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

நாடு முழுவதும் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தனை வழக்குகளும் நீதிபதிகள் சரியாக பணியாற்றவில்லை என்பதால் தேங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் ஒரு அமர்வு மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் 89 வழக்குகளை விசாரிக்கிறது. ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஒரு ஆண்டுக்கே 89 வழக்குகள் தான் விசாரிக்கப்படுகின்றன.

நமது நீதிபதிகள் சிறந்த முறையில் பணியாற்றினாலும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நாட்டில் 40 ஆயிரம் நீதிபதிகள் தேவை என 1987-ம் ஆண்டே சட்ட ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் இன்று வரை 18 ஆயிரம் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். எனவே, தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றும், அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளேன்.

மேலும், நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில் 80 சதவீத வழக்குகள் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 பெரிய மாநிலங்களில்தான் உள்ளன. இதற்கு அந்த மாநிலங் களின் மக்கள்தொகை, கல்வியறிவு உள்ளிட்டவைதான் முக்கிய காரணம். நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க மாற்று முறை தீர்வு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் லோக் அதாலத், சமரச தீர்வு மையங்கள் மூலம் பல லட்சக்கணக்கான வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. ஆனால், பல இடங்களில் சமசர தீர்வு மையங்களுக்கு வழக்குகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. எனவே, நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகளில் சமரசம் மூலம் தீர்வு காணத்தக்க வழக்குகளை கண்டறிந்து சமரச தீர்வு மையத்துக்கு நீதிபதிகள் பரிந்துரைக்க வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலு வாடி ஜி ரமேஷ், எம்.ஜெயசந்திரன், பி.ராஜேந்திரன், டி.கிருஷ்ணகுமார், மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT