தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து இரண்டே நாளில் சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். மக்களின் வசதிக்காக 4 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்களை பிரித்து இயக்கியதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கானோர் கடந்த 2 நாட்களாக தீபாவளி பண்டிகைக்காக பல்வேறு ஊர்களுக்கு கார்களிலும் பஸ், ரயில்களிலும் புறப்பட்டுச் சென்றனர்.
கடைசி நாளான நேற்றும் கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்கள், சிறப்பு கட்டண ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட தூரம் செல்லும் பயணிகளும் ரயில்களில் நின்று கொண்டே பயணம் செய்தனர். தீபாவளியை ஒட்டி சுமார் 50 ஆயிரம் பேர் ரயில்களில் மட்டுமே பயணம் செய்திருப்பார்கள் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் ஆய்வு
அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மக்களின் வசதிக்காக கோயம்பேடு, பூந்த மல்லி, தாம்பரம் (சானடோ ரியம்), அண்ணாநகர் (மேற்கு), கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணைய பஸ் நிலையத்தில் இருந்தும் நேற்று சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மக்கள் கூட்டம் வர, வர சிறப்பு பஸ்கள் வரவழைக்கப்பட்டு வரிசையாக இயக்கப்பட்டன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கடந்த 2 நாட்களாக கோயம்பேடு பஸ் நிலையம், ஊரப்பாக்கம், தாம்பரம், பூந்த மல்லியில் பஸ்களின் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் வரவேற்பு
பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்க 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இயக்கப் பட்டன.
இதனால், வழக்கத்தை விட கூட்ட நெரிசல் குறைவாக இருந்தது. ஆனால், பஸ்களை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. முன்பதிவு செய்திருந்த அரசு விரைவு பஸ்களுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இது போன்ற காலதாமதத்தை தவிர்க்க முறையாக திட்டமிட்டு இயக்கினால் மக்களுக்கு மிகவும் பயனுள் ளதாக இருக்கும். தீபாவளிக்கு மட்டுமல் லாமல், பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை நாட் களிலும் இதுபோல் சிறப்பு பஸ்களை பிரித்து இயக்க வேண்டும்’’ என்றனர்.