சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நீர்நிலை கள் வறண்டாலும், அவற்றை வேறு எந்த தேவைக்காகவும் மாற்றக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் இரண்டு நாட்கள் நடை பெற்ற மண்டல சுற்றுச்சூழல் மாநாட்டின் நிறைவு விழா தர மணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இதில் பங்கேற்று பேசியதாவது:
நகரமயமாதல், தொழிற்சாலை கள் பெருக்கம் காரணமாக நகரப் பகுதியில் 80 சதவீத நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. அவற்றை மீட்டெடுப்பது பெரும் சவாலாக உள்ளது. வளர்ச்சிக்காக சாலை கள் அமைக்கப்படும்போது, இரு பகுதிகளிலும் சாலை அகலப் படுத்தப்படுகிறது. அதற்காக இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. இதுபோன்று அகற்றப்படும் மரங்களை மீண்டும் உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். அதனால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும். எனவே, வருங்காலங்களில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை அமைக் கும்போது, அதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நீர்நிலைகளின் தன்மையை மாற்றக் கூடாது. நீர்நிலைகள் வறண்டாலும், அதை வேறு எந்த பயன்பாட்டுக்கும் மாற்றக்கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் மத்தியில் அலட்சியம் நிலவுகிறது. எதற்கெடுத் தாலும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி, தூக்கியெறிந்து வருகின்றனர். மழைநீர் வடிகாலில் கழிவுநீர் குழாயை இணைத்து மாசு ஏற்படுத்துகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டால்தான், நம்மால் வாழ முடியும். எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பும் மிக அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்திரகுமார் பேசும் போது, “அண்மைக் காலமாக நீர்நிலை கள் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இவை நீதிமன்றத்தில் வழக்காக வரும்போது, நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிக்க நேர்கிறது. இதனால் வாழ்நாள் முழுதும் சேமித்த பணத்தைக் கொண்டு, நீர்நிலைகளில் கட்டப்பட்ட வீடுகளை வாங்குவோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், கிராம அளவில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம்” என்றார்.
நிகழ்ச்சியில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வின் நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எஸ்.நம்பியார், தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் பி.வணங்காமுடி, பசுமை தீர்ப்பாய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.