வேலூர்/ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டத்தில் பரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.
இந்நிறுவனத்தில் வருமானத்தை குறைத்து காட்டி அதிக சொத்துகள் குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கரோனா காலத்தில் ஏற்றுமதி செய்த வகையில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அதிகாரிகள், ஆம்பூரில் பரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யப்படுவதால் அரசுக்கு செலுத்தியுள்ள வரி சரிபார்க்கப்பட்டது. அப்போது, முக்கிய தகவல்கள் அடங்கிய ‘பென் டிரைவ்’ மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. 23-ம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதனைத்தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று காலை 7.30 மணி முதல் சோதனை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பெருமுகையில் கே.எச். குழுமத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகளிலும், ராணிப்பேட்டை, மேல்விஷாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலும் நேற்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. ஆலை உரிமையாளர்கள், மேலாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
இந்நிலையில், சென்னையில் இருந்து கூடுதலாக வரவழைக்கப்பட்ட வருமான வரி அதிகாரிகள் ஆம்பூர் சென்று அங்கு சோதனையில் ஈடுபட்டனர். பரிதா மற்றும் கே.எச். குழுமம் என 2 குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர்.