முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்போலோ மருத்துவ மனையில் தொடர்ந்து பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று ரத்ததானம் செய்தனர். படுகர் இன மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வருக்கு நேற்று 35-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போலோ மருத்துவமனை மருத்துவ நிபுணர்களுடன் சேர்ந்து லண்டன் மருத்துவர் மற்றும் எம்ய்ஸ் மருத்துவக் குழுவினரும் சிறப்பு சிகிச்சை அளித்தனர். பின்னர் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த 2 பெண் மருத்துவர்கள் சென்னை வந்து முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். இப்போது அவர்களில் ஒருவர் மட்டும் முதல் வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.
நான்கு வார சிகிச்சைக்குப் பிறகு முதல்வருக்கு வழங்கப்பட்ட மருந்துகளின் அளவில் மாற்றம் செய்யப்பட்டது. இதில், இதயம் மற்றும் நுரையீரலில் இருந்த நோய்த் தொற்று நீங்கி, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு முதல்வர் எழுந்து உட்கார்ந்தார். நல்ல நினைவுடன் பேசவும் செய்தார். அதனால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதனிடையே, லண்டன் மருத் துவர் ஜான் ரிச்சர்டு பீலே மீண்டும் அப்போலோ மருத்துவமனை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து விட்டுச் சென்றார். எய்ம்ஸ் மருத் துவக் குழுவினர் மீண்டும் வந்து முதல்வருக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போலோ மருத்துவமனை முன்பு அமர்ந்திருக்கும் அதிமுக மகளிரணியினர் தினமும் வழிபாடு நடத்தி முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கோயில் களில் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஜெய லலிதா பூரண நலம் பெற வேண்டி, அப்போலோ மருத்துவமனை முன்பு நேற்று நூற்றுக்கும் மேற்பட் டோர் ரத்ததானம் செய்தனர். இதற் காக அனைத்து வசதிகள் கொண்ட சிறப்பு வாகனம் வரவழைக்கப்பட்டி ருந்தது. அதில், சென்னை வளசர வாக்கம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் இ.சி.சேகர் தலைமையில் அதிமுகவினர் 100-க்கும் மேற்பட் டோர் ரத்ததானம் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இனத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று அப் போலோ மருத்துவமனை முன்பு பிரார்த்தனை பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.