சென்னை: பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரத்தின் இரண்டாவது விமான நிலையம் சென்னையிலிருந்து 70 கிமீ. தொலைவில் உள்ள பரந்தூரில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மொத்தம் 4,800 ஏக்கர் பரப்பளவில் இந்தவிமான நிலையத்தை அமைப்பதற்காக பொதுமக்களிடமிருந்து பெருமளவில்நிலங்கள் கையகப்படுத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், மக்கள் தங்களின் நிலங்களை பறிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் அச்சத்தை போக்கி, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை பாமக நாளை (இன்று) நடத்துகிறது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள அருணா திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு இந்த கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாமகதலைவர் அன்புமணி கூட்டத்தில் கலந்து கொண்டு, பரந்தூர் புதிய விமான நிலையத்திட்டத்தால் பாதிக்கப்படும் அனைத்து கிராம மக்களிடமும் கருத்துகளை கேட்டறியவுள்ளார்.