சென்னை: டிஜிபி சைலேந்திரபாபு வடபழனி காவல் நிலையத்தில், இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபி சைலேந்திரபாபு காவல் நிலையங்களுக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் அவர், சென்னை வடபழனி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, காவல் நிலையத்தில் உள்ள வழக்குகளை ஆராய்ந்து அதன் மீதான புலன்விசாரணை பற்றி கேட்டறிந்தார். ரோந்து வாகனத்தை ஓட்டி பார்த்து, முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் தெரிந்து கொண்டார்.
“குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையத்துக்கு புகார் மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய குறைகளை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பணியிலிருந்த காவலர்களிடம் அறிவுறுத்தினார்.
மேலும், காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அவர்களுக்கு வார விடுமுறை சரியாக வழங்க வேண்டும் என்று காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார்.