தமிழகம்

2023-ம் ஆண்டில் இந்தியாவில் வீட்டில் செல்லப் பிராணி வளர்ப்பவர் எண்ணிக்கை இரட்டிப்பாகும்: பராமரிப்பு சந்தை மதிப்பும் உயரும் என ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் இந்தியாவில் இரட்டிப்பாகும் எனவும், அவற்றின் பராமரிப்பு சந்தை மதிப்பும் 2026-ல் உயரும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகள் இன்று மனிதனுக்கு நல்ல நண்பராகவும், மன அழுத்தத்தை குறைக்கும் நல்ல மருத்துவராகவும் இருந்து வருகின்றன. இதனால், தற்போது நாளுக்கு நாள் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான செல்லப் பிராணிகளை தங்களது வீட்டிலேயே வளர்த்து அவற்றை பராமரித்து வருகின்றனர்.

ஆனால், தங்கும் இடம் இல்லாமல், உணவில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியும் செல்லப் பிராணிகளை ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் கண்டுகொள்வதில்லை. அந்தவகையில், இந்தியாவில் 8 கோடி பூனை மற்றும் நாய்கள் எந்தவித ஆதரவுமின்றி தெருக்களில் சுற்றித் திரிவதாக உலகளாவிய கணக்கெடுப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் அதிக அளவினான செல்லப் பிராணிகள், அவற்றை வளர்ப்பவர்களால் கைவிடப்படுகின்றன என மார்ஸ் பெட் கேர் இந்தியா என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக 2020-ம் ஆண்டு கரோனா பேரிடரின்போது, தொற்று பரவும் அபாயத்தால் பலர் தங்களது செல்லப் பிராணிகளை கைவிட்டுள்ளனர். அந்தவகையில் உலகளவில் 28 சதவீதம் பேரும், இந்தியாவில் 50 சதவீதம் பேரும் தங்களது செல்லப் பிராணிகளை கைவிட்டுள்ளதாக சில தனியார் விலங்குகள் நல அமைப்புகள் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் மக்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் குறித்து எண்ட் பெட் ஹோம்லெஸ், ஸ்டேட்டிஸ்டா, மார்டர் இண்டலிஜென்ஸ், ரிசர்ச் அண்ட் மார்க்கெட்ஸ் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வில் இந்தியாவில், மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளில், 34 சதவீதம் பேர் நாயையும், 20 சதவீதம் பேர் பூனையையும், 14 சதவீதம் பேர் பறவைகளையும், 10 சதவீதம் பேர் தங்க மீன்களையும், மீதமுள்ளவர்கள் மற்ற வகை செல்லப் பிராணிகளையும் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

கனடாவில் உள்ள ஒரு வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கடந்த சில ஆண்டுகளாக நாய்களை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றும், இதனால் செல்லப் பிராணிகளுக்கான உணவு விற்பனை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டில் இந்தியாவில் 1.95 கோடி நாய்கள் செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்க்கப்பட்டன. 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.10 கோடியாக உயரும் என அதன் ஆய்வில் தெரிவித்துள்ளது. அதேபோல் பூனைகள் குறித்து நடத்திய ஆய்வில், 2014-ம் ஆண்டு பூனைகளை செல்லப் பிராணிகளாக வைத்திருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 1.21 கோடி என்றும், அதுவே 2023-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி, தோராயமாக 2.40 கோடியை எட்டும் என்றும் கணித்துள்ளது.

இந்த வளர்ச்சியால் இந்தியா செல்லப் பிராணி உணவு சந்தையில் 2027-ம் ஆண்டுக்குள் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (சிஏஜிஆர்) 4.7 சதவீதமாக பதிவு செய்யும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ‘இந்தியா பெட் கேர் மார்க்கெட் அவுட்லுக் 2021-2026’ தலைப்பில் வெளியான ஓர் அறிக்கையில், 2026-ம் ஆண்டில் இந்தியாவில் செல்லப் பிராணிகளின் பராமரிப்பு (உணவு, செல்லப் பிராணி பயன்பாட்டு பொருட்கள், அழகு சாதனங்கள், சுகாதாரம்) சந்தை மதிப்பு ரூ.7,500 கோடியாக உயரும் எனவும், இதில் நாய்களின் பராமரிப்பு பங்கு சரிபாதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அந்தவகையில் செல்லப் பிராணிகளுக்கான பராமரிப்பு சந்தையில் முதலீட்டாளர்கள், குறிப்பிட்ட லாபம் ஈட்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT