சென்னை: அதிமுக, பாஜக கட்சிகளை வேறுபடுத்தி பார்க்கவில்லை என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை துரை வைகோ நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்த ஆவணப் பட திரையிடலுக்கான அழைப்பிதழை பிரேமலதா மற்றும் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோருக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரைபோல் வள்ளல் மனம் படைத்தவர் விஜயகாந்த். அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்ல மனிதர். அவர் பூரண குணமடைந்து எழுச்சியுடன் தமிழக அரசியலில் வலம்வர வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பொது வாழ்வு குறித்த ஆவணப் படத்தை வெளியிட இருக்கிறோம். இது வைகோவின் 56 ஆண்டு கால சாதனைகள், தியாகங்களை உள்ளடக்கிய 75 நிமிட ஆவணப் படம். இதை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய ஒன்றாக இதை செய்துள்ளேன். இந்த படத்தில் யாரையும் தாக்கிப் பேசவில்லை. இதற்கான அழைப்பிதழை தேமுதிக நிர்வாகிகளிடம் வழங்கினோம்.
அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து இயக்கங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்றுள்ள அரசியல் சூழலை பொறுத்தவரை சனாதன சக்திகள் திராவிட கொள்கைளைத் தாண்டி வேரூன்றும் முயற்சியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதிமுக, பாஜகவை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை. ஒன்றாகவே பார்க்கிறோம். அதே நேரம் அரசியல் தவிர்த்து நண்பார்களாகவே இருக்கிறோம். அதிமுகவிலும் வைகோவை மதிக்கின்ற தலைவர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.