சென்னை: பொதுமக்கள் விரும்பும் சன்ன ரக நெல்லை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி அறிவுறுத்தினர்.
வேளாண்மை மற்றும் உணவுத் துறை சார்பில், 2022-23-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள வேளாண் துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வேளாண் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், துறைச் செயலர்கள் ஜெ.ராதாகிருஷ்ணன் (உணவு), சி.சமயமூர்த்தி (வேளாண்மை) மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் தரப்பில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன், திருவாரூர் விவசாய சங்கக் கூட்டமைப்பு நிர்வாகி சத்தி நாராயணன், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின் வேளாண் சாகுபடிப் பரப்பு 22 லட்சம் ஹெக்டேரைத் தாண்டியுள்ளது. உற்பத்தியும் 1.22 லட்சம் டன்னைத் தாண்டி, சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மோட்டா, சன்ன ரக அரிசி உற்பத்தியாகும் நிலையில், மக்கள் சன்ன ரகத்தையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால், விவசாயிகள் மோட்டா ரகத்தையே அதிகம் விளைவிக்கின்றனர்.
இதனால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரும் சன்ன ரக அரிசியை மக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். எனவே, சன்ன ரக அரிசியை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, “கடந்த ஆண்டு தமிழகத்தில் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 43 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,731 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 3,123 திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது 3 லட்சம் டன் கொள்ளவு கொண்ட கிடங்குகள் கட்ட ரூ.240 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை மூலம் 500 உலர்கலன்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி ஆகியோர், “நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு ரூ.100 உயர்த்தி வழங்கியுள்ளது. தற்போது 5 லட்சம் ஹெக்டேரில் கூடுதலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களைவிட மற்ற மாவட்டங்களில் இந்த ஆண்டு விவசாயிகள் அதிகம் நெல் உற்பத்தி செய்கின்றனர். எனவே வருமாண்டில் 50 லட்சம் டன் நெல் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
நெல் கிடங்குகளில் நிலவும் தவறுகளைத் தடுக்க, ஒன்றிய அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். மாநில, மத்திய அரசுகளின் பண்டகசாலைகள், மார்க்கெட்டிங் அலுவலக கட்டிடங்களை நெல் சேமிப்புக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் 13 நெல் அரவை ஆலைகளை தமிழகத்தில் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட உள்ளது.
மேலும், வயலுக்கே சென்று கொள்முதல் செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்களை பாக்கெட்டில் வழங்கும் நடைமுறை ஓராண்டில் அமல்படுத்தப்படும்” என்றனர்.