முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து தமிழக அதிகாரிகளிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் விசாரித்தார். ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர் சவ்தாரி சுல்ஃப்கர் அலி, அப்போலோ மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 20 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சுவாச உதவியுடன், நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப் பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரி வித்துள்ளது.
முதல்வரின் உடல்நலம் பற்றி அறிந்து கொள்வதற்காக தினமும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். கேரள முதல் வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ஆகியோர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில உணவுத்துறை அமைச்சர் சவ்தாரி சுல்ஃப்கர் அலி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர், மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி விஜயகுமார் ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல்நலம் பற்றி மூத்த அமைச்சர்கள் மற்றும் டாக்டர்களை சந்தித்து கேட்டறிந்தனர்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித் துக் கொண்டார். மேலும், பூஜை பிரசாதங்கள், பெருமாளுக்கு அணி யப்பட்ட ஆடை ஆகியவற்றை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கும்படி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, பூஜை பிரசாதங்கள் அடங்கிய கூடை நேற்று மாலை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.