பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 109-வது ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 109-வது ஜெயந்தி விழா, தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
அதிமுக சார்பில் அவைத் தலைவர் மதுசூதனன், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, வைத்திலிங்கம் எம்.பி., எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச் சர்கள் மரியாதை செலுத்தினர்.
திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்டோரும் இல.கணேசன் எம்.பி. தலைமையில் பாஜக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவர் படத்துக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சமக தலைவர் ஆர்.சரத்குமார், மக்கள் தேசிய கட்சித் தலைவர் சேம.நாராயணன் மற்றும் பல்வேறு கட்சியினர், தேவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்தியையொட்டி, நந்தனம் பகுதியில் பலத்த பாது காப்பு போடப்பட்டிருந்தது. வழக்க மாக குருபூஜையின் போது நந்தனம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும். இதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் தேவர் ஜெயந்தி வந்ததால், வாகன நெரிசல் சற்று குறைவாக இருந்தது.