மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அப்போலோ மருத்துவ மனைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் ஆளுநர் வித்யாசாகர் ராவையும் சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஜெயலலிதா சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு இன்று (நேற்று) சென்றேன். அங்கு முதல்வரின் உடல்நலம் குறித்து அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டியிடம் கேட்டறிந்தேன். மேலும், முதல்வ ருக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து வந்துள்ள மருத்துவர் ரிச்சர்டு பீலேவையும் சந்தித்தேன்.
அவரிடம், ‘எங்கள் முதல்வ ருக்கு சிகிச்சை தருவதற்காக இங்கிலாந்தில் இருந்து இரண்டா வது முறையாகவும் வந்தது, தமிழக மக்களுக்கு மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக மக்கள் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நீங்களும் மற்ற மருத்துவர்களும் தருகின்ற சிகிச்சையால், முதல்வர் முழுமை யான உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறேன்’ என்று கூறினேன். அவரும் பதிலுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோரை யும் சந்தித்துப் பேசினேன். முதல்வர் நலமாக இருக்கிறார். உயர்தர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு அவர்களது உடல்நிலை ஒத்துழைப்பு தந்து வருகிறது. விரைவில் முழு உடல் நலம் பெறுவார். அதிமுகவின் தொண்டர்களின் கவலைகள் நீங்கும்.
இதையடுத்து, ஆளுநர் மாளி கைக்குச் சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தேன். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் வித்யாசாகர் ராவ். அப்போது, எனக்கு அவர் மிகச்சிறந்த நண்பராக திகழ்ந்தார். அப்போதைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தோம். நட்பு அடிப்படையிலான இந்த சந்திப்பு 12.50 முதல் 1.30 மணி வரை 40 நிமிடங்கள் நீடித்தது.
இந்த சந்திப்பின்போது மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டு வன், சிறுபான்மை பிரிவுச் செய லாளர் முராத் புகாரி ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
பொறுப்பு முதல்வர் தேவையில்லை
முன்னதாக ஆளுநர் மாளி கைக்கு வெளியே நிருபர்களிடம் வைகோ கூறும்போது, ‘‘தமிழகத் துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. 2009-ல் இலங்கையில் இறுதிகட்டப்போர் நடந்தபோது லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் முத்துக்குமார் உட்பட பலர் தீக்குளித்தனர். முதல்வராக இருந்த கருணாநிதி, உடல்நிலை சரியில்லாமல் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கேள்வி எழவில்லை’’ என்றார்.