தமிழகம்

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் வந்தது: இன்று மாலை பூண்டி ஏரியை வந்தடையும்

செய்திப்பிரிவு

சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நேற்று மாலை தமிழக எல்லையை வந்தடைந்தது. இன்று மாலை பூண்டி ஏரியை வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வோர் ஆண்டும் 2 கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு திறந்து விடுகிறது. எனினும், ஜூலை 1-ம் தேதி முதல் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடாமல் இருந்தது.

ஆந்திராவின் சைலம் மற்றும் சோமசீலா அணை, கண்டலேறு அணைகளில் தற்போது போதிய நீர் இருப்பு உள்ளதால், தமிழக பொதுப்பணித்துறையின் கோரிக்கையை ஏற்று கடந்த 10-ம் தேதி கிருஷ்ணா நீரை திறந்து விட்டது. கடந்த 14-ம் தேதி முதல் விநாடிக்கு 500 கனஅடியும், நேற்று முதல் விநாடிக்கு 600 கனஅடியும் திறந்துவிடுகிறது.

இந்த நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு நேற்று மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தது. விநாடிக்கு 10 கனஅடி என்ற அளவில் வந்த கிருஷ்ணா நதி நீரை, தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் கோட்டாட் சியர் ஜெயசந்திரன், பொதுப்பணித் துறையின் பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் பக்தவச்சலம், கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட செயற்பொறியாளர் சீனிவாசராவ், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

தமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர், ஜீரோ பாயிண்டில் இருந்து, 25 கி.மீ. தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று மாலை வந்தடையும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT