தமிழகம்

கூட்டாட்சி முறைக்கு எதிராக தேவகவுடா செயல்படுகிறார்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமருக்கான சலுகைகளை அனுபவித்துக் கொண்டு கூட்டாட்சி அமைப்புக்கு விரோதமாக தேவகவுடா உண்ணாவிரதம் இருந்து வருவதாக திமுக செய்தித் தொடர்பு செயலாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

பிரதமராக இருந்த எச்.டி.தேவகவுடா, கன்னட அமைப்பின் வாட்டாள் நாகராஜ்போல காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். காவிரி உற்பத்தியாகும் இடத்துக்கு சென்று ஆய்வு செய்து தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை என்கிறார். இப்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார்.

முன்னாள் பிரதமருக்கான சலுகைகளை அனுபவித்துக்கொண்டு கூட்டாட்சி அமைப்புக்கு விரோதமாக அவர் நடந்து கொள்கிறார். காவிரி நடுவர் மன்றத் தலைவர் பதவியில் நீதிபதி சித்தோகோஷ் முகர்ஜி தொடரக் கூடாது என பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தேவகவுடா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது 1996-ம் ஆண்டு அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவின் மாநிலங்களை எதிரியாக நினைத்து வழக்கு தொடர்ந்தவர், கூட்டாட்சியில் எப்படி பிரதமராக இருக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் ரிட் மனுவை தாக்கல் செய்தேன். இது தொடர்பாக மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து அந்த வழக்கை தேவகவுடா திரும்பப் பெற்றார். அதன் பிறகே பிரதமராக பதவியேற்றார்.

முன்னாள் பிரதமர் என்ற கண்ணியத்தை காக்காமல் குழப்பமான நிலையை தேவகவுடா உருவாக்கி வருகிறார். இதுகுறித்து இதுவரை யாரும் வினா எழுப்பவில்லை என்பது வேதனையைத் தருகிறது.

இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT