சென்னையில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலின். படம்: எஸ்.சத்தியசீலன் | சிலுவம்பாளையத்தில் வாக்களித்த பழனிசாமி. படம்: எஸ்.குருபிரசாத் | நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். படங்கள்: எல்.சீனிவாசன்

 
தமிழகம்

தமிழகத்தில் 85 சதவீத வாக்குப்பதிவு: இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டனர்

அசம்பாவிதம் எதுவும் இல்லை | மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்​களித்​த​தால், வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்​டி​யுள்​ளது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்​ணிக்கை மே 4-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​த​படி, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் நேற்று ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 14.59 லட்​சம் முதல் தலை​முறை வாக்​காளர்​கள் உட்பட மொத்​தம் 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றிருந்​தனர். இந்​நிலை​யில், தமிழகம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டிருந்த 75,064 வாக்​குச்​சாவடிகளில் வாக்​குப்​ப​திவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்​கியது.

பாது​காப்பு பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர், 83,875 காவல் துறை​யினர், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

வாக்​குச்​சாவடி பணி​யில் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​பட்​டனர். 1.06 லட்​சம் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இயந்​திரங்​கள் பழுது, வாக்​குப்​ப​திவு தாமதம் போன்ற சிக்​கல்​கள் குறை​வாகவே இருந்​தன.

வாக்​குச்​சாவடிகளின் உள்ளே மற்​றும் வெளியே தலா ஒரு கண்​காணிப்பு கேமரா என மொத்​தம் 1.50 லட்​சம் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டு, சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலு​வல​கத்​தில் இருந்து நேரடி​யாக கண்​காணிக்​கப்​பட்​டது.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், திரு​வள்​ளூர் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் பசுமை வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டு, வாக்​காளர்​களை உற்​சாக​மாக வரவேற்​று, மகிழ்ச்​சி​யுடன் வாக்​களிக்க வைத்​தனர்.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை​யாக அடையாளம் காணப்​பட்டு, நுண்​பார்வை​யாளர்​கள் மேற்​பார்​வை​யில், துப்​பாக்​கி ஏந்​திய துணை ராணுவப் படை​யினரின் பாது​காப்​புடன் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. காலை 7 மணிக்கு வாக்​குப்​ப​திவு தொடங்​கு​வதற்கு முன்​பு, அரசி​யல் கட்சி முகவர்​கள் முன்​னிலை​யில் மாதிரி வாக்​குப்​ப​திவு நடத்​தப்​பட்​டது. பின்​னர் மாதிரி வாக்​கு​களை அழித்​து​ விட்​டு, வாக்​குப்​ப​திவு தொடங்​கியது.

காலை முதலே வாக்​காளர்​கள் ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர். வெயிலை தவிர்க்​கும் வித​மாக, காலை 7 மணிக்கே முதி​யோர்​கள் அதிக அளவில் வாக்​குச்​சாவடிகளுக்கு வந்து வாக்​கு​களை செலுத்​தினர். சக்கர நாற்​காலி மூலம் முதி​யோர், மாற்​றுத் திற​னாளி​களை அழைத்​துவர தன்​னார்​வலர்​கள் உதவினர். நேற்று முகூர்த்த நாள் என்​ப​தால் பல்​வேறு பகு​தி​களி​லும் புது​மணத் தம்​ப​தி​கள் மணக்​கோலத்​தில் வந்து வாக்​களித்​தனர்.

காலை முதலே வாக்​குப்​ப​திவு: விறு​விறுப்​பாக நடை​பெற்​றது. காலை 9 மணிக்​குள்​ளாக 17.69 சதவீத வாக்​கு​களும், பிற்​பகல் ஒரு மணிக்​குள் 56.81 சதவீத வாக்​கு​களும் பதி​வாகின. குறிப்​பாக, இளைஞர்​கள், பெண்​கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து அதிக அளவில் வாக்​களித்​தனர். இதனால், தமிழகத்​தில் வாக்​குப்​ப​திவு 85 சதவீதத்தை தாண்டி பதி​வாகி​யுள்​ளது.

சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநிதி மற்​றும் அவரது குடும்​பத்​தினர், தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக், பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், இளை​ய​ராஜா, ரஜினி​காந்த், கமல்​ஹாசன், அஜித் உள்​ளிட்ட திரை​யுல​கினர் பலரும் வாக்​களித்​தனர்.

சில வாக்​குச்​சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேலும் வாக்​குப்​ப​திவு நீடித்​தது. அசம்​பா​விதங்​கள் எது​வுமின்றி தமிழகம் முழு​வதும் அமை​தி​யாக வாக்​குப்​ப​திவு நடந்து முடிந்​தது. பின்​னர், அரசி​யல் கட்சி முகவர்​கள் முன்​னிலை​யில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சீல் வைக்​கப்​பட்​டு, அந்​தந்த தொகு​தி​க்​கான வாக்கு எண்​ணும் மையத்துக்கு கொண்டு செல்​லப்​பட்​டன.

தமிழகம் முழு​வதும் 63 வாக்கு எண்​ணும் மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அங்கு பாது​காப்பு அறை​யில் (‘ஸ்​டி​ராங் ரூம்’) வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன. இவை சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் 24 மணி நேர​மும் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன. 5 அடுக்கு பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. ஒவ்​வொரு மையத்​தி​லும் தலா 500 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடைபெறு​கிறது.

எஸ்ஐஆர் பணியால் கிடைத்த பலன்: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ள 3.98 லட்சம் பேர், முகவரியில் இல்லாதவர்கள் 66.44 லட்சம் பேர் என மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பின்னர், சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தனர். சுமார் 69 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 91.86 சதவீதம் பதிவானது. சென்னை மாவட்டத்தில் 83.09 சதவீதம் பதிவானது.

முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 85.63 சதவீதம், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 91.94 சதவீதம், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 89.15 சதவீதம், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 73.94 சதவீத வாக்குகள் பதிவாகின.

SCROLL FOR NEXT