சென்னை மாநகரப் பகுதியில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, குப்பையை முறை யாக அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் தோராயமாக 71 லட்சம் பேர் வசிக் கின்றனர். லட்சக்கணக்கானோர் தினமும் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இங்கு தினமும் 4 ஆயிரத்து 500 டன் குப்பை உரு வாகிறது. இது வீடு வீடாக சேகரிக்கப்பட்டு, தொட்டிகளில் கொட்டப்படுகிறது. அங்கிருந்து காம்பாக்டர் வாகனங்கள் மூலமாக குப்பை மாற்றும் வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வகை பிரிக்கப்பட்டு, பின்னர் கொடுங் கையூர், பெருங்குடி ஆகிய பகுதி களில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்படுகிறது.
முன்பு மாநகராட்சி சார்பில் காலை 6 மணிக்கு பிறகே காம்பாக்டர் வாகனங்கள் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டது. அந்த காம்பாக்டர்கள், சாலையை அடைத்துக்கொண்டு, போக்கு வரத்து நெரிசலை ஏற்படுத்துவ தாலும், துர்நாற்றம் வீசுவதாலும், பொது மக்கள், பள்ளி செல்லும் பிள்ளைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
புகார்களைத் தொடர்ந்து, நெரிசல் மிகுந்த சாலைகளில் இரவில் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 3 மாதங்களாக அமலில் உள்ளது. ஆனால் பல இடங்களில் பகல் நேரங்களிலேயே குப்பை அகற்றும் காம்பாக்டர் வாகனங்கள் சென்று போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுத்து கின்றன.
தற்போது தேர்தல் அறிவிக்கப் பட்ட நிலையில், பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் குப்பை விவகாரத்தில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மாநகராட்சி நிர்வாகம் உறுதியாக உள்ளது.
இது தொடர்பாக வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “இப்பகுதியில் ஒரே இடத்தில் 4 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு அடிக்கடி ஒருநாள் முழுவதும் குப்பையை அகற்றாமல் விட்டுவிடுவார்கள். தேர்தல் அறிவிப்பு வந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குப்பையை நேரத்தோடு அகற்றி வருவதுடன், அப்பகுதியில் பிளீச்சிங் பவுடரை முறையாக தூவி வருகின்றனர். குப்பைத் தொட்டிகளையும் கழுவி தூய்மைப் படுத்தி வருகின்றனர்’’ என்றார்.
இது தொடர்பாக துப்புரவு பணியாளர்களிடம் கேட்டபோது, “மாநகராட்சியின் காம்பாக்டர் வாகனங்கள், ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் செயல்படுவதால், பழுது ஏற்படுவது வழக்கம். பழுது நீக்க ஒரு நாளாவது ஆகும். அதனால் பழுதான வாகனம் செல்ல வேண்டிய பகுதியில் அன்று குப்பை அகற்றப்பட மாட்டாது. தற்போது, மாற்று வண்டியை அனுப்பியாவது தவறாமல் குப்பையை அகற்ற வேண்டும் என்றும், அப்பகுதியில் பிளீச்சிங் பவுடரை கட்டாயம் தூவ வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதனால் குப்பை முறையாக அகற்றப்பட்டு வருகிறது” என்றார்.
சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குப்பையை அகற்றி, அங்கு பிளீச்சிங் பவுடர் போடுவதும், வாகனம் பழுதானால் மாற்று வாகனத்தை அனுப்புவதும் வழக்கமாக கடைபிடிக்கும் நடைமுறைதான். அது புதிய நடைமுறை இல்லை” என்றார்.