தமிழகம்

பிளஸ் 1, பிளஸ் 2 கணினி அறிவியல் தமிழ்வழிப் பாடப் புத்தகங்களில் பிழைகள்: ஆசிரியர்கள், மாணவர்கள் அவதி

கல்யாணசுந்தரம்

பிளஸ் 1, பிளஸ் 2 கணினி அறிவியல் தமிழ்வழிப் பாடப் புத்தகங்களில் பக்கத்துக்குப் பக்கம் எழுத்துப் பிழைகளும், மொழிபெயர்ப்பு பிழைகளும் அதிகளவில் உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடு பாடங்கள் உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி, தொகுத்த புதிய பாடத்திட்டத்துடன்கூடிய இந்த பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் 2019-ல் வெளியிட்டது.

இதன் திருத்திய பதிப்பு 2020-ல் வெளியிடப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு நிகழ்கல்வியாண்டிலும் வழங்கப்பட்டுள்ளது.

இதில், தமிழ்வழிப் பாடத்திட்டத்தில் கணினி அறிவியல், கணினி பயன்பாடு ஆகியபாடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களில் பக்கத்துக்குப் பக்கம் எழுத்துப் பிழைகளும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதில் வார்த்தைப் பிழைகளும் உள்ளதால், ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

இதுகுறித்து முதுநிலை கணினி அறிவியல் ஆசிரியர்கள் சிலர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:

”2019-ல் கணினி அறிவியல் பாடங்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதில், ஆங்கில வழிப் பாடப் பிரிவுக்கான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அது அப்படியே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ்வழிப் பாடப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதில், பக்கத்துக்கு பக்கம் பிழைகளாகவே உள்ளன. பெரும்பாலான ஆங்கில வார்த்தைகள் கூகுள் மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால், அதிகளவில் பிழைகள் உள்ளன.

மேலும், சொற்பிழைகளுடன், வார்த்தைகள் கோர்வையில்லாமலும் உள்ளன. மேலும், பல பாடங்களின் இறுதியில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான பதில் அந்தப் பாடத்தில் இல்லை. எனவே,பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய தமிழ்வழிப் பாடத் திட்ட புத்தகங்களை முழுமையாக திருத்தம் செய்து, புதிதாக வெளியிட வேண்டும்” என்றனர்.

பிழைகளில் சில… உதாரணமாக, பிளஸ் 1 கணினி பயன்பாடு- பக்கம் 8-ல் கீயர்(Keyer) என்ற ஒரு வார்த்தை தமிழில் விசை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது கீயர் என்றுதான் இருக்க வேண்டும். மேலும், 245-வது பக்கத்தில் Mode என்பதற்கு ஓரிடத்தில் முறைமை என்றும், மற்றொரு இடத்தில் முறை என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மல்டிமீடியா என்பதற்கு பல்லூடகம் என்றுதான் இருக்க வேண்டும். ஆனால், பல் ஊடகம் என்றும், மல்டிமீடியம் என்றும்உள்ளது. இதேபோன்று மீவுரைக்கான (Hypertex) வரையறை தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. Raster Image என்பது செவ்வகப் படம் என தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 கணினி பயன்பாடு புத்தகத்தில், 18-வது பக்கத்தில் ஒரே வினா பல பிரிவுகளில் கேட்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 கணினி பயன்பாடு புத்தகத்தில் 112-வது பக்கத்தில் ஸ்டார் ஆபீஸ் குறித்த பாடத்தில் ஓபன் ஆபீஸ் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. Arguments என்பது செயலுறுப்புகள் என்றுதான் இருக்க வேண்டும்.

ஆனால், சில இடங்களில் அளபுருக்கள் என உள்ளன. தகுந்த ஒரு விடையை தேர்ந்தெடுத்தல் பகுதியில் ஒரு கேள்விக்கு முதல் 3 விடைகளும் சரியாக கொடுக்கப்பட்டுள்ளன.

விசைப் பலகையில் குறுக்குவழிச் சாவிகளுக்கான விளக்கத்தில் சாவிகள் குறியீடு இடம்பெறாமல் அனைத்திலுமே ஸ்டார்குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோல, பிழைகள் இல்லாத பக்கங்கள் குறைவாகவே உள்ளன என கணினி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT