கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு நேற்று சத்துணவு பரிமாறிய சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன். படம்: எஸ்.கோபு 
தமிழகம்

சட்டவிரோத செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது அதிகரிப்பு: அமைச்சர் கீதா ஜீவன் வேதனை

செய்திப்பிரிவு

அண்மைக் காலமாக சட்டத்துக்கு முரணான செயல்களில், குழந்தைகளை ஈடுபடுத்துவது அதிகரித்து வருவதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள மாநில நீதித்துறை பயிற்சி மையத்தில், குழந்தைகள் நல காவலர்களுக்கான சட்ட விழிப்புணர்வு பயிற்சியை நேற்று தொடங்கிவைத்து அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, “கூர்நோக்கு இல்லத்தில் உள்ள குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான பயிற்சி வழங்கப்படுகிறது.

குறிப்பாக, வேலூர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள குழந்தைகள் இசைக் கருவிகள் வாசிப்பது, யோகா உள்ளிட்டவற்றை கற்று வருகின்றனர். அண்மைக்காலமாக சட்டத்துக்கு முரணான செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. நீதித்துறை மற்றும் காவல்துறை இணைந்து காலம் தாழ்த்தாமல் விரைந்து வழக்குகளை முடிக்க வேண்டும்.

குழந்தைகள் தொடர்பான வழக்குகளை கையாளும்போது குழந்தைநேய எண்ணத்தோடு, அவர்களின் எதிர்காலம் பாதிக்காமல் அணுக வேண்டும். அப்போது அந்த குழந்தைகளை நல்ல குடிமகனாக மாற்றிவிட முடியும். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடான ரூ.9.24 கோடி, இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக கிணத்துக்கடவு பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் செயல்படும் குழந்தைகள் மையத்தில், அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கலவை சாதம், கருப்பு சுண்டல் உணவை சாப்பிட்டுப்பார்த்து, சுவை மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று முட்டையுடன் சத்துணவு பரிமாறி, உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

SCROLL FOR NEXT