திருவல்லிக்கேணியில் சாலையோரங்களில் தங்கியிருப்போர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை, முப்தி அமிருல்லா சாலையோரத்தில் 52 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அதிகாரிகளுக்கும் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இது தொடர்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கூறியதாவது: இப்பகுதியில் 54 குடும்பங்கள் குடும்ப அட்டையுடன் வீடுகள் மற்றும் சாலையோரங்களில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீடு ஒதுக்கி உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், அதற்காக ரூ.5.80 லட்சம் உடனடியாக அல்லது தவணை முறையில் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
தினக்கூலிகளான எங்களால் உடனடியாகவோ அல்லது தவணை முறையிலோ பணம் செலுத்த முடியாது. தற்போது, நாங்கள் தங்குவதற்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் தாய், சேய்நல மருத்துவமனை அருகில் தற்காலிகமாக ஒதுக்கி இருக்கும் இடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. திடீரென்று பல ஆண்டுகளாக வசித்த பகுதியில் இருந்து வேறு இடத்துக்கு செல்லும்படி அதிகாரிகள் கூறுவதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "குடிசை மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான பணத்தை செலுத்த வங்கிக்கடனுக்கும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
எனவே, அனைவரையும் விரைவாக புதிய வீடுகளில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.