உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைவதால், நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகள் நியமிக் கப்பட்டுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இந்த அரசாணை, ஆளுநர் வித்யாசாகர் ராவின் ஒப்புதலுடன் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட 12 மாநகராட்சிகள் உள்ளன. இவை தவிர, 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றி யங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் என ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதவி வகித்து வருகின்றனர். இவர் களின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடை கிறது.
இதையடுத்து, புதிய பிரதிநிதிகளை தேர்வு செய் வதற்கான உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடத்துவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப்டம்பர் 26-ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, அக்டோபர் 3-ம் தேதி முடிந்தது. அக்டோபர் 4-ம் தேதி மனுக்கள் பரிசீலனை தொடங்கியது.
இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப் படவில்லை என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்தது. புதிய அறிவிக்கையை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தபோதும், தேர்தல் ரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. இதையடுத்து, தேர்தல் நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது. நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.
கடந்த 18-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் 4 வாரங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தேர்தல் ரத்து உத்தரவு நீடிக்கும் எனவும் அறிவித்தது.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடை யும் நிலையில், தேர்தலும் தள்ளிப் போவதால் நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்காக அமைச் சரவையைக் கூட்டி ஒப்புதல் பெற வேண்டும். முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனு மதிக்கப் பட்டுள்ளதால், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர வைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், தனி அதிகாரிகளை நியமிப்பதற் கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட் டுள்ளதாவது:
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு புதியவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம், புதிய அறிவிக்கை வெளி யிட்டு டிசம்பர் 31-ம் தேதிக் குள் தேர்தலை நடத்தும் படியும், அதுவரை தனி அதிகாரிகளை நியமிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி பதவிகளுக்கான பதவிக் காலம் முடிகிறது. இப்பதவிக் காலத்தை 5 ஆண்டு களுக்கு மேல் நீடிக்க முடியாது என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தனி அதிகாரிகளை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை, ஆளுநர் வித்யாசாகர் ராவின் ஒப்புதலுடன் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக, மாநகராட்சி, நகராட்சிகளில் ஆணையர்களும், பேரூராட்சிகளில் செயல் அலுவலர் களும், ஊராட்சிகளை பொறுத்தவரை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தனி அதிகாரிகளாக நியமிக்கப்படுவ துண்டு. தற்போது தனி அதிகாரி நியமனத்துக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், எந்தெந்த உள்ளாட்சி அமைப்பில் யார் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்பது குறித்து தனியாக விரைவில் அறிவிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.